பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

தமிழர் பண்பாடு


போமாறு அறுத்துக் கொண்டு ஓடிவிட்ட, எதிர்ப்படும் எதையும் கொல்லவல்ல சுறாமீனைத் தம் வல்லமையெல்லாம் காட்டி, அகப்படுத்திக் கொள்ளாது எம் சுற்றத்தார் வறிதே வருவார் அல்லர். ஆகவே தங்கிச் சென்மோ"

"குணகடல் இவர்ந்து குரூஉக்கதிர் பரப்பிப்
பகல்கெழு செல்வன் குடமலை மறையப்
புலம்புவந்து இறுத்த புன்கண் மாலை
இலங்குவளை மகளிர் வியன்நகர் அயர,
மீன்நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண்சுடர்,
நீல்நிறப் பரப்பில் தயங்குதிரை உதைப்பக்
கரைசேர்பு இருந்த கல்என் பாக்கத்து
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு
தங்கின் எவனோ? தெய்ய; செங்கால்
கொடுமுடி அவ்வலை பரியப் போகிய
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வா ரலரே”
                      நற்றிணை : 215

நெய்தல் நிலத்து மக்களின் வாழ்க்கை வாய்ப்புகள், ஒரு பாட்டில் விளக்கப்பட்டுள்ளன. "நெல்லை அறுவடை செய்யும் பெரிய உழவர், செங்கதிர் பரப்பிக் காயும் ஞாயிற்றின் வெயில் வெப்பம் தாங்கமாட்டாத போது, தெளிந்த கடல் நீரில் பாய்ந்து களை தீர்வர். திண்ணிய மீன்பிடி படகாம் திமிலை உடைய வலிய பரதவர், உண்டார்க்கு உரம் ஊட்டும் மதுவுண்டு, இனிய குரவைக் கூத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடித் திளைப்பர். கடல் அலைகள் தூவும் தூவலால் தழைத்து வளர்ந்து புன்னையின் தேன் நிறைந்த மலர்களால் ஆன மாலை அணிந்த ஆடவர், ஒளிவீசும் வளை அணிந்த மகளிர்க்கு நீராடலில் வலக்கை கொடுத்து உதவுவர், வண்டுகள் வந்து மொய்க்க் மலர்ந்த, குளிர்ந்த நறுமணமே நாறிக் கொண்டிருக்கும் கானலில் தழைத்திருக்கும் கடல் முள்ளி மாலை அணிந்த வளை அணிந்த மகளிர், வானளாவ வளர்ந்திருக்கும் பனையின் நுங்கின் இனிய நீரும், பொதிவுற வளர்ந்திருக்கும் கரும்பின்