பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தமிழர் பண்பாடு

மாவீரர்களின் படைவரிசையில் பெரிதும் பாராட்டப்பெற்ற பிரிவு, இந்திய விற்படையினர் தாம், இந்திய நாட்டு வேடுவன், புலியைத் தன் வில்லிலிருந்து செலுத்தும் ஒரே அம்பினால் இன்றும் கொன்று விடுவான் என்ற செய்திகள் மூலம், தம் தொழிலில் எக்காலத்தும் சிறந்தவர் என்ற பாராட்டினைப் பெற்றுவிட்ட இந்தியாவின் மலை நாட்டு மக்கள், மேற்கொண்ட, விற்படையின் தோற்றம் இதுதான்.

பண்டைக்காலத்துக் குறவர்களின் மற்றொரு கண்டு பிடிப்பு, மனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாம் தீ மூட்டுதல், பழைய கற்காலத்துத் தொடக்க நிலையில், குறிஞ்சிவாழ் மக்கள் கடுமையான புயற்காற்று வீசுங்கால் மூங்கிற்கழிகள் ஒன்றோடொன்று கடுமையாக உராய்த்துக் கொள்ளும் போது, தீப்பொறிகள் எழக்கண்டு இரண்டு மரத்துண்டுகளை ஒன்றோடொன்று தேய்ப்பதன் மூலம் நெருப்பை உண்டாக்கலாம் என்பதைக் கண்டு கொண்டனர். நெருப்பை , அவன் முதன்முதலாகப் பயன் படுத்தியது, தான் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை வதக்குவதற்கே.

வேட்டுவ மகளிர்

அக்குடியிருப்பில், ஆடவர், வேட்டை குறித்து வெளியே சென்றிருக்கும்போது மகளிர், கனிபறித்தல், கிழங்ககழ்தல், தங்கள் வாழிடங்களைச் சூழ, நிறைய விளைந்திருக்கும் புல்லரிசி, மூங்கிலரிசி, தினை அரிசிகளைத் திரட்டிக் கொணர்ந்து களஞ்சியங்களை நிரப்பிக்கோடல் போன்ற வற்றில் ஈடுபட்டிருப்பர்.

தங்கள் குழந்தைகளை வளர்ப்பது, மகளிரின் மற்றொரு பணியாம். அந்த நாகரீகப்பருவத்தில், மனிதன் வீடுகட்டத் தெரிந்து கொள்ளவில்லை. வெயில் மழைகளிலிருந்து காத்துக் கொள்ள, பருமரங்கள், பெரும்பாறைகள், இயற்கைக்குகைகள் அளிக்கும் புகலிடம் தவிர்த்து வேறு புகிலடம் தேட வேண்டிய தேவை இல்லாத அளவு, தென்னிந்திய தட்பவெப்பநிலை துணை புரிந்தமையால் வீடுகள் அருகியே