பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

தமிழர் பண்பாடு


ஞாயிறு, மேற்கு மலையில் சென்று மறைந்து விட்டான். மிக்க நாணத்தையும் மெல்லிய சாயலையும் உடைய சிறியவளாகிய இவளோ, தன் சிறந்த அழகு கெடுமாறு, உன் பிரிவுக்கு ஏங்கி, அழகிய குளிர்ந்த கண்கலங்க ஓயாது அழத் தொடங்கி விட்டாள். தலைவ! அதனாலும், உப்பங்கழியில் உள்ள சுறா மீன் குத்தியதால் புண்ணுற்ற கால்களையுடைய உன் கோவேறு கழுதை, நீர் நிறைந்து கறுத்துத் தோன்றும் நீண்ட கழியைக் கடக்கமாட்டாது மெலிந்து விட்டது. ஆதலாலும், வலிய வில்லேந்தி உன் உடன் வரும் வீரர்களோடு, இவ்விரவில் செல்லாது, இளைப்பாறி, பனைமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் வெண்மணல் பரந்து கிடக்கும் தோட்டங் களில், தன் துணையை அழைப்பான் வேண்டி, அன்றில் அகவும் அவ்விடத்தில், சின்னம் சிறு பூங்கொத்துக் களையுடைய நெய்தல் வளர்ந்துகிடக்கும், உப்பங்கழி சூழ்ந்த எங்கள் நாட்டின் கண், நீ தங்கிச் செல்வாயாக; அவ்வாறு தங்கிச் செல்வதால் வருவதொரு கேடு ஏதேனும் உண்டோ?”

”நெடுவேள் மார்பின் ஆரம் போலச் ,
செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைங்கால் கொக்கின் நிறைபறை உகப்ப
எல்லை பைபயக் கழிப்பிக், குடவயின்
கல் சேர்ந் தன்றே, பல்கதிர் ஞாயிறு;
மதரெழில் மழைக்கண் கலுழ, இவளே
பெருநாண் அணித்த சிறுமென் சாயல்
மாண்நலம் சிதைய, ஏங்கி ஆனாது.
அழல்தொடங் கினளே; பெரும்; அதனால்
கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி
நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந்து அசைஇ,
வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே, சிதைகுவது உண்டோ ?
பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பை
அன்றில் அக்வும் ஆங்கண்,
சிறுகுரல் நெய்தல் எம்பெருங்கழி நாடே”
                           அகம் : 120