பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

229


மேய்புலத்தில், சிறுசிறு துளிகளாக ஓயாது விழுந்து கொண்டே இருக்கும் மழைச்சாரல், தன் உடலின் ஒரு புறத்தை நனைத்துக் கொண்டிருப்பதும், பொருட்படுத்தாமல், கைக்கோலை நிலத்தில் ஊன்றி, ஒரு காலை அதன் மேல் வைத்து, ஓய்வான நிலையில் நின்றவாறே , இதழ்களைக் குவித்து அவன் எழுப்பும் வீளை ஒலியைக் கேட்கம் ஆடுகள், பிறர்க்குரிய புலம் சென்று மேய்ந்துவிடாமல், அவ்வொலிக்கு மயங்கி, அவனைக்சூழ அடங்கி நிற்கும் அம்முல்லை நிலத்தில், இரவு நெடும் பொழுது ஆயினும் விருந்தினர் வந்துவிட்டால் மகிழ்ந்து வரவேற்பவளும், கணவன் கூறிய சொற்பிழையாது இல் இருந்து நல்லறம் ஆற்றும் கற்புடையாளும், மெல்லிய சாயலும் இளமை நலம் மாறா அழகுடையாளும் ஆகிய இல்லத்தரசி வாழ்கின்ற வீடு உளது."

"வான் இடுப்பு சொரிந்த வயங்குபெயல் கடைநாள்
பாணி கொண்ட பல்கால் மெல் உறி,
ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப்
பறிப்புறத்து இட்ட பால் நொடை இடையன்,
நுண்பல் துவலை ஒரு திறம் நனைப்பத்
தண்டுகால வைத்த ஒடுங்குநிலை, மடிவிளி
சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே, பொய்யா யாணர்
அல்லில் ஆயினம், விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே."
                       நற்றிணை : 142

முல்லையில் மிகவும் இன்பம் தரும் பருவம் இளவேனில், "பருவவரவால் இலைகளெல்லாம் பழுத்து உதிர்ந்து போன பிடவமரத்துக் கிளைகளெல்லாம் அரும்பலர்ந்து நிறைந்து விட்டன; புதல்கள் தோறும் படர்ந்து கிடக்கும் முல்லைக் கொடிகள் பூத்துக்குலுங்கின ; கொன்றை மரங்கள், பொன் போலும் மலர்களை ஈன்றன. காயாவின் சிறுசிறு கிளைகளில் நீலமணி போலும்" பன்மலர்கள் நிறைந்து விட்டன.