பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

தமிழர் பண்பாடு


காண்பவர் கருத்தை ஈர்க்கும் தகுதியற்றதான இழி தொழிலும் புலவர்களின் கவியார்வத்தைத் தணித்து விடவில்லை. "ஊரில் விழாத் தொடங்கிவிட்டது. அப்போது பறை கொட்டுதல் போலும் பணி ஆற்ற வேண்டுவது அவன் , கடமை. ஆகவே ஆங்கும் செல்ல வேண்டும். பிள்ளைப் பேற்றிற்கு உரிய காலம். மனைவிக்கு வந்து விட்டது. அப்போது உடனிருந்து அவளுக்கு உதவ வேண்டுவதும் இன்றியமையாதது; ஆகவே, வீட்டிற்கும் செல்ல வேண்டும், இதற்கிடையில் ஞாயிறும் மறையத் தொடங்கிவிட்டான். மழை பெய்யவும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கட்டிலுக்குக் கயிறு பின்னும் தொழிற்கடமை மேற்கொண்டு விட்ட அத்தொழிலாளி, அப்பணியை விரைந்து முடித்து விட்டு மேற்கூறிய இருபணிகள் குறித்து விரையத் துடிக்கும் நிலையில், பின்னும் வார்கோத்த அவன் கை ஊசி விரையும் விரைவினைச் சொல்ல இயலாது. அவ்விரைவினைத், தன்னை வெல்வார் யாரேனும் உளரேல் வருக என வஞ்சினம் கூறி வந்திருக்கும் வேற்றூர் வீரனோடு போரிட்டு வெல்லத் துடிக்கும், ஆத்திமாலை அணிந்து, அவ்வூர் வீரனின் உள்ள விரைவிற்கு உவமை காட்டியுள்ளார் ஒரு புலவர்”.

“சாறுதலைக் கொண்டெனப், பெண்ஈற்று உற்றெனப்,
பட்ட மாரி, ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ!
ஊர்கொள வந்த பொருந்னொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தனை போரே"
                        -புறம் : 82

ஊரில் நிகழ இருக்கும் விழாக்களை ஊர் மக்களுக்கு அறிவிக்கும் அறிவிப்பாளர்களாகப் பழங்காலத்தில் குயவர்களும் பணிபுரிந்துள்ளனர். "அரும்பு கட்டிய கதிர் போல் தோன்றும், ஒளிவீசும் மலர்களைக் கொத்துக் கொத்தாக ஈனும் நொச்சி மாலை அணிந்து, ஆறுபோல் அகன்று நீண்ட தெருவில், ஊரில் உள்ளார் யாவரும் கேட்க, ‘இவ்வூரில், இன்ன நாளில் இன்ன விழா நடைபெறும்; விழாவிற் பங்கு