பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

தமிழர் பண்பாடு


தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர்.'’
       -குறுந்தொகை : 1 :1 - 3

தாம் தொடுத்த மலர்மாலையை அணிந்து கொண்டு, மூங்கில் போலும் பருத்த தோள் உடையேம் என்ற துணிவால் கடல் நீரில் புகுந்து ஆடிய மகளிர், கடற்கரைக் கானல் சோலை யில் பரந்து கிடக்கும் மணலால் சிற்றில் கட்டி விளையாடும் இன்பக் காட்சியைக் காட்டியுள்ளார் ஒரு புலவர்.

"துளைத்த கோதைப் பணைப்பெரும் தோளினர்,
கடலாடு மகளிர் கானல் இழைத்த
சிறுமனை”.
             - குறுந்தொகை : 326 : 1-3

ஒளிவீசும் வளைகளை அணிந்த மகளிர், வறுபடாத பச்சை நெல்லை, அவலாக இடித்து முடித்து, அது செய்யத் துணை புரிந்த, கரிய வயிரம் பாய்ந்த மரத்தால் ஆன உலக்கையை முற்றித் தலை சாய்த்து அழகுறக் காட்சி அளிக்கும் நெற்பயிர் நிற்கும் வயல் வரப்பில் படுக்க வைத்து விட்டு விளையாடச் சென்றுவிடும் சிறப்பைக் கூறுகிறது ஒரு செய்யுள்.

“பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்தொடி மகளிர் வண்டல் அயரும்”.
                 - குறுந்தொகை : 238 : 13

தன்பால் அன்பு காட்டுவதில் ஒப்புக் காணமாட்டாத தன் தோழியர் கூட்டத்தொடு அருவியில் பாய்ந்து ஆடி- அவ்வாறு ஆடுங்கால், நீரலைகள் தாக்கியதால், தன்னுடைய பெரிய, அழகிய, அன்பொழுகும் கண்கள் சிவந்து போகக் காட்சி அளிக்கும் செல்வத்திருமகளைக் காட்டுகிறது ஒரு செய்யுள். -

“பொருவில் ஆயமொடு அருவி ஆடி
நீர் அலைச் சிவந்த பேரமர் மழைக்கண்".
                   நற்றிணை : 44 : 1:2