பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

241


சகுனங்களிலான நம்பிக்கை அளவுமீறி இருந்தது. பறவைகளின் போக்கு, அவற்றின் குரல், வர இருக்கும் ஆக்கம், இழப்புக்களை அறிவித்துவிடவல்லன என உறுதியாக நம்பினர். "புள்ளும், பொழுதும் பழித்தல்" (புறம்: 204 : 10). பரிசில் கிடைக்காதபோது, அது தராதுவிடுத்த புரவலனைப் பழிக்காது, தாம் புறப்பட்டு வந்தபோது நிகழ்ந்த புள்நிமித்தம் காலக்கேடுகளையே பழிப்பர்.

பேய்கள், மரங்களிலும் இடுகாடுகளிலும் வாழும் என்று நம்பினார்கள். பேய், தன் கூட்டத்தோடு ஆடிக்களிக்கும் இடுகாட்டை ஒரு புலவர் குறிப்பிட்டுள்ளார். (புறம் : 288: 45) போர்க்களத்தில் வீரப்புண் பெற்று இறந்து வீழ்ந்து கிடக்கும் வீரர்களின் வீரப் புண்களைத் தோண்டி, அதிலிருந்து பெருகிய செங்குருதியால் சிவந்து போன தன் கைகளால் தனது மயிரைக் கோதி முடித்து, அதனால் கறுத்த தன் மேனியும் செந்நிறங் காட்டும் ஒரு பேய்மகளைக் காட்டுகிறார் ஒரு புலவர்.

"பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி ,
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்".
                புறம் : 62:2-4

பேய்மகள் பிணத்தைத் தழுவி, அதன் வெள்ளிய நிணத்தைத் தின்னும்; "பேஎய் மகளிர் பிணம் தழுஉப்பற்றி, விளர் ஊன் தின்ற வெம்புலால்" (புறம் : 359 : 4-5) பேய், மகளிரைப் பற்றிக் கொள்ளும்; அவ்வாறு பேயால் பற்றப் பட்ட மகளிர், குதித்து ஆடுவர். "முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கும்". (புறம் : 259:5-6) வெண்கடுகைப் புகைத்தால் பேய் ஓடி மறைந்துவிடும். "ஐயவி புகைப்பவும்" (புறம் : 98 : 15) என்றெல்லாம் மக்கள் நம்பி இருந்தனர்.

ஓடுகின்ற ஆற்றின் இடையே உள்ள, துருத்தி என்றும் அழைக்கப் படும் மேட்டில், பல்வேறு இசைக்கருவிகள் இசை எழுப்ப, ஆட்டின் கழுத்தை அறுத்துத், தினையைப் பிரப்பங்