பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

253


போர்க்களிறு களம் புகுந்து பகைவர் படையைத் தாக்கிப் பாழடித்துக் களத்தில் இடம் பண்ணிவிட, அவ்வாறு இடம் கண்ட களத்தில் நன்கு தீட்டப்பெற்று ஒளிவீசும் இலை போலும் முனையையுடைய வேலொடு புகுந்து, அரசையும் அழித்துப் பகைவர் படையையும் பாழ்செய்து, அவ்வெற்றிப் புகழ் நாடெங்கும் பரவ, பகைவர் போர் முரசைக் குருதிப் புனலை உலை நீராகக் கொண்டு, உலையில், தசை, மூளை முதலாயின பெய்து, வீரவளை அணிந்த தோளாகிய துடுப்புக் கொண்டு, துழாவி ஆக்கிய உணவைப் பேய்களுக்குப் படைத்து, அக்களத்தில் கள வேள்வி செய்த, கொல்லும் போர்வல்ல செழிய".

"நளிகடல் இரும் குட்டத்து
வளி புடைத்த கலம் போலக்
களிறு சென்று களன் அகற்றவும்,
களன் அகற்றிய வியலாங்கண்,
ஒளிறு இலைய எஃகு ஏந்தி
அரைசுப்ட அமர் உழக்கி,
உரைசெல, முரசு வெள்வி,
முடித்தலை அடுப்பாகப்
புனல் குருதி உலைக் கொளீஇத்,
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அருபோர்ச் செழிய!"
                           புறம் : 26:7-17


நகரங்களில் பரத்தமைை

நேரிடை நிலை, உருவக நிலை ஆகிய எந்நிலையில் பொருள் கொண்டாலும், நகர வாழ்க்கை என்றால், நாகரீக வளர்ச்சி என்றே பொருள் : நாகரீகத்தின் தெளிவான முத்திரை, விரும்பத் தகாதது எனக் கருதப்படாதாயின், பரத்தைமை ஒழுக்கம் இடம்பெறுவதேயாம். பரத்தையர் ஆடல் பாடல்களில் நன்கு பயிற்சி பெற்றிருப்பர், கண்கவர் வகையில் உடையணிந்திருப்பர். அழகுற ஒப்பனை செய்து கொள்வர். "விறல்பட ஆடவல்லாளாகிய விறலி, மாணிக்க :