பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

தமிழர் பண்பாடு


மணிக்கோவை எட்டால் ஆன மேகலை அணியால் அழகு பெற்ற அல்குலும், மடப்பம் பொருந்திய மை உண்ட கண்களும், ஒளிவீசும் நெற்றியும் கொண்டு", திகழ்தலைக் கூறுகிறது ஒரு புறநானூற்றுச் செய்யுள்.

"இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
மடவரல் உண்கண், வாள் நுதல் விறலி”
                      -புறம் : 89 : 1-2

எளிதில் வயப்படக்கூடிய ஆடவரைத் தங்களோடு, ஆற்றுத்துறையிலும், குளப் படித்துறையிலும் நீராடி மகிழுமாறு தூண்ட வல்லவர் பரத்தையர். ஆடவன் ஒருவனைத் தன் அழகால் மயக்கவல்ல உள்உரம் படைத்த ஒரு பரத்தை, அவன் மனைவிக்குக் கீழ்க்காணும் இறுமாந்த சொற்களைக் கூறி அனுப்பினாள். ‘'என் கூந்தலில் ஆம்பலின் முழுப்பூவை அணிந்து அழகு செய்து கொண்டு, புது வெள்ளம் புரண்டோடும் பெரிய நீர்த்துறையில் புனல் விளையாட்டை விரும்பிச் செல்கின்றேன். அவள் கணவனும், அங்குத் தவறாது வந்து, புனல் விளையாட்டில் என்னோடு பங்கு கொண்டு விடுவானோ என அவள் அஞ்சுவளாயின், கொடிய போர் நிகழும்போது, போர் அறம் பிறழாது போரிட்டுப் பகைவரை அழிக்கவல்ல எழினி என்பானது பெரிய வேற்படை போர்க்களத்திடத்தே உள்ள அவனுடைய பெரிய ஆனிரையைப், பகைவர் கொள்ளாவாறு சூழ நின்று காப்பது போல, தன் கணவன் மார்பு, என்னை அணுகவிடாவாறு, தன் தோழியர் கூட்டத்தோடு அவனைக் காத்துக் கொள்வாளாக’

"கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது
அஞ்சுவ துடைய ளாயின், வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனை ஆன் பெருநிரை போலக்
கிளையொடும் காக்க, தன் கொழுநன் மார்பே'’
                          குறுந்தொகை : 80