பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

தமிழர் பண்பாடு


ஒருமுறை, பெரிய வில்லாளனாகிய ஒரு குறுநிலத் தலைவனைச் சென்று கண்டனர். அவர்களுள் தலைவன், பாணன். ஆகவே, அவன் ஏனையோரை நோக்கி, ‘'நான் பாடுகிறேன், விறலி; நீங்களெல்லாம் முழவினை முழக்குங்கள், யாழ்களில் பண்ணிசை எழுப்புங்கள் ; களிற்றின் தொங்கும் கைபோலும் தூம்பு எனப்படும் பெருவங்கியத்தை இசையுங்கள்; எல்லரி எனப்படும் சல்லியை வாசியுங்கள். ஆகுளி எனப்படும் சிறுபறையை அறையுங்கள்; பதலை எனப்படும் ஒருகண் மாக்கிணையின் ஒரு பக்கத்தை மெல்லக் கொட்டுங்கள்; நமது தொழில் உணர்த்தும் அடையாளக் கோலாம் மதலை மாக்கோலை என் கை தாருங்கள்'’.

"பாடுவல்; விறலி! ஓர்வண்ணம், நீரும்
மண்முழா அமைமின்; பண்யாழ் நிறுமின்;
கண்விடு தூம்பின் களிற்றுயிர் தொடுமின்;
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பை என இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தம்மின்".
                புறம் : 152 : 13-18

பாட்டுடைத் தலைவன், அவர்களுக்கு இறைச்சி கலந்த உணவும், இனிய மதுவும், பொன்னும் நிறையத் தருவன் என்பது கூறத் தேவை இல்லை. பாணன் கூற்றில் கூறுவதானால், “வேட்டையில் தான் எய்து கொன்ற மானின் நிணத்தோடு கூடிய இறைச்சியாம் பக்குவமாகப் பண்ணப்பட்ட உணவோடு, உருக்கிய ஆன் நெய்போலும் மதுவையும் தந்து, தன் மலையில் கிடைத்த கலப்பில்லாத பொன்னொடு, பல்வகை மணிக்குவியல்களையும், வாங்கிக் கொள்ளுங்கள் என வழிநடையில் வாரி வழங்கினான்”.

"வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான்நிணப் புழுக்கோடு
ஆன் உருக் கன்ன வேரியை நல்கித்,
தன் மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச்
சுரத்திடை நல்கி யோனே” (புறம் : 152 : 25-30)