பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம்

45


அந்நிலங்களுக்கு உரிய கருப்பொருள்களில், முதல்வனவாகக் கூறப்படுகின்றன. திறனாய்வுக்காக, அவை, உடனடியாக எடுத்துக் கொள்ளப்படும். அவை தவிர்த்த ஏனைய கருப்பொருள்கள், அந்நிலம் ஒவ்வொன்றிற்கும், அந்நிலம் பற்றிய பாக்களுக்கும் உரியனவாய், உணவுப் பொருள்கள், மாவினங்கள், மரவினங்கள், பறவைகள், பறைகள், தொழில்கள், யாழ்கள் முதலியனவாம்.

தெய்வம், உணாவே, மா,மரம்,புள், பறை,
செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.
- தொல்காப்பியம் - பொருளதிகாரம் - 18.

அக்கருப்பொருள்களை வரிசைப்படுத்திக் காண்பது, பழந்தமிழ்ப்புலவர்கள், எத்துணை நுண்ணிய நோக்கர்கள், இயற்கையோடு உண்மையான உறவு கொண்டிருப்பதில் எத்துணை ஆர்வமுடையவர்கள் என்பதைக் காட்டுகிறது. முல்லைக்கு உரிய உணவு, வரகும், சாமையும் அவரையும் மாவினம்: மானும், முயலும், மரம் : கொன்றையும், குருந்தும். பறவை ; காட்டுக் கோழியும், கெளதாரியும். தொழில் : நிரை மேயத்தலும், வரகு, சாமை திரட்டலும். பொழுதுபோக்கு : ஏறுதழுவல். மலர்; இந்நிலத்துக்குத் தனிப்பெயர் தந்த முல்லையும், பிடவும், தளவும் தோன்றியும், நீர்: காட்டாறு.

குறிஞ்சிக்குப் பொருந்தும் உணவு: ஐவனம் எனப்படும் மலை நெல்லும், மூங்கில் அரிசியும், தினையும் . மாவினம் : புலியும், யானையும், கரடியும், காட்டுப்பன்றியும். மரம்: அகிலும், ஆரமும் தேக்கும், திமிசும், வேங்கையும். பறவை : கிளியும் மயிலும், தொழில் : தேன் அழித்தலும், தினை விளைத்தலும், கிளிகடிதலும், வேட்டையாடலும். மலர்கள்: குறிஞ்சியும், காந்தளும், சுனைக் குவளையும். நீர்: அருவி நீரும் சுனை நீரும். மருதத்துக்குரிய உணவு: செந்நெல்லும், வெண்ணெல்லும். மாவினம்: எருமையும் நீர் நாயும். மரம்: மருதமும், காஞ்சியும், வஞ்சிக் கொடியும். பறவை: தாராவும் நீர்க்கோழியும், அன்னமும், அல்லிசைப் புள்ளும். தொழில் : நடுதலும்,