பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம்

51


இன்பம், மீனவர்களுக்கு மறுக்கப்படவில்லை , கழி நீரில் படர்ந்திருக்கும் அல்லி மலர்களை, அவற்றின் மீதுற்ற ஆசையால் அணிந்து கொண்டு தங்களை ஒப்பனை செய்துகொள்ளும் கரிய மேனியராகிய மீனவ இன மகளிரின் . நன்கு வளர்ந்த உடல் உறுப்புகள், மீன் முடைநாறும் நிலையிலும், அவர்களின் இல்லத்து ஆடவர் கடல் மேல் செலவு குறித்துப் போய்விட்ட நிலையில் அண்டை நிலத்துச் சிறந்த ஆடவர், தங்கள் காதலியராம் அம்மகளிரைக் காண்டல் விருப்போடு, தங்கள் வண்டிகள் அல்லது தேர்களில் கடற்கரைக்கு வந்து செல்வர் என்பதைப் பிற்கால இலக்கியங்களில் படிக்கிறோம்.

ஏனைய நிலப்பகுதிகளிலும், நாகரீகம் நனிமிக வளர்ந்துவிட்ட ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில், களவுக் காதல், கற்புக்காதலுக்கு வழிவகுத்துவிட்டது. தமிழர் களிடையே இடம்பெற்றுவிட்ட, ஆரியர்களால் திருத்தப் படுவதற்கு முற்பட்டதால், பழைய திருமணச் சடங்குமுறை, அகநானூறு என்ற தொகை நூலைச் சேர்ந்த இரண்டு செய்யுட்களில் விளக்கப்பட்டுள்ளது. "உழுத்தம் பருப்புக் கலந்து நன்கு குழையச் சமைத்த பொங்கலோடு, பெரிய சோற்றுக் குவியல், பலரும் உண்ட பிறகும் குவிந்து கிடக்கிறது. வரிசையாகக் கால்களை நட்டுப் போடப்பட்ட பந்தலின் கீழ், புதுமணல் பரப்பப்பட்டுள்ளது. மனை விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. மணமக்கள் மாலைகளால் அணி செய்யப்பட்டுள்ளனர். தீயன விளைவிக்கும் கோள்களின் தொடர்பு நீங்கப்பெற்ற, வெண்பிறைத் திங்கள், சிறந்த புகழ் வாய்ந்த உரோகிணி எனும் நாளோடு கூடிய அந்த நல்ல நாளில் இருள் அகன்ற விடியற்போதில், திருமண ஆரவாரத்தில் மூழ்கிவிட்ட முதிய மகளிர், தலையில் கொண்ட குடங்களிலும், கையிற் கொண்ட பண்டங்களிலும் நீரைக் கொண்டு வந்து, வரிசையாகக் கொடுக்கக் கொடுக்க, மகப்பேறு பெற்று மாண்புடைய தூய அணிகள் அணிந்த மகளிர் நால்வர், 'கற்பு நெறி வழுவாது, நல்ல பல பேறுகளையும் பெற்றுத்தந்து, கணவனைப் பேணும் அன்புடையை - ஆகுக' என வாழ்த்தியவாறே, அத்தண்ணீரால் குளிப்பாட்ட,