பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகமங்களின் தோற்றம்

79


காண்டொக்யத்திலும், 'பிரஹதாரண்யக' விலும் விளங்க உரைக்கப்படும், வித்யாக்களில் தெளிவுறத் தோன்றுமளவு, உபநிஷதங்கள், கர்மகாண்டத்திலிருந்து படிப்படியாகத் தோன்றி வளர்ச்சி நிலைபெற்றன. என்றாலும், மக்களில் பெரும்பாலோர் உள்ளுறுதி அற்ற நோஞ்சான்களாயினர்.

அவர்களின் உள்ளம், ஓளபநிஷத கொள்கை, பயிற்சிகளின் விழுமிய சிறப்பு நிலையினை அடையும் உணர்வுகளால் நிறைந்து வழியலாயிற்று. அவர்களுக்காகவே முகிழ்த்தன. ஆகமக் கொள்கைகளும் பயிற்சிகளும். இவை, உலகின் சாதாரண வாழ்வின் இயல்புகளோடு பங்கு கொண்டு விட்டன. கடவுள் வழிபாடு என்பது மக்களைப் போற்றும், சிறப்பாக, குருக்கள் மற்றும் அரசர்களைப் போற்றும் வழிபாட்டு நெறியின் மறுபடிவமேயாம். இவ்வாறு, பாரதப், போருக்குப் பிற்பட்ட காலமே, உபநிஷதங்களும், தலையாய ஆகமங்களும் தோன்றிய காலமாம் என்பதைக் காண்கிறோம்.

ஆகமங்களின் மூலம்

ஆகமப் பயிற்சிகள் எங்கிருந்து தோன்றின என்ற இரண்டாவது வினாவிற்கு விடை காண்பது சிறிது அதிக அருமையுடைத்து. ஆகம வழிபாட்டு முறைகள் முழுக்க முழுக்கத் தீ வழிபாடற்றது ஆதலாலும், வழிபாட்டைத் தொடர்ந்த வேதம் ஓதல் வேண்டப்படாதது ஆதலாலும், அவை, தஸ்யூ வழிபாட்டு முறையிலிருந்தே வளர்ச்சி பெற்றனவாதல் வேண்டும். தஸ்யூ வழிபாட்டு முறையிலிருந்தே வளர்ச்சி பெற்றனவாதல் வேண்டும். தஸ்யூ வழிபாட்டுமுறை, வடக்கு தெற்கு உள்ளிட்ட இந்தியப் பெரு நிலப்பரப்பு முழுவதிலும், ஆரிய வழிபாட்டு முறை தோன்றுவதற்கு முன்னரே, நிச்சயமாக இருந்து வந்தது. வேதங்களும், அவற்றின் துணை நூல்களான வேத இலக்கியங்களும், அத்துணைப் பரப்புடையவும், எல்லாப் பொருள்களையும் தம்மகத்தே அடக்கிக் கொண்டனவும் ஆம் ஆதலின், தஸ்யூ வழிபாட்டு உரிமைகள், வேத காலத்தில் என்ன ஆயின என்ற வினாவை, எவன் ஒருவனும் தனக்குத் தானேயும் கேட்டுக் கொண்டான் அல்லன்.