பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9இங்குக் கோடை, மாரிக் காலங்களும் உண்டு. கோடைகள் குறுகியவை; மக்கள் வாழும் உலகின் மற்றப் பகுதிகள் போலவே கதகதப்பானவை. கோடையில் எங்கும் ஒரு நாள் முழுதும் கதிரவன் மறையாது. மாரிகள் நீண்டவை; குளிர் நிறைந்தவை. இருட்டும் குளிரும் நிறைந்த பகுதிகளில் கனடா, உருசியா, நார்வே, ஸ்வீடன் முதலிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றார்கள்.

இங்குப் பனி அதிகம் பெய்கிறது. கோடையில் மாரிக்காலப் பனியும், பனிக்கட்டியும் உருகி ஆர்க்டிக்கின் துந்திரப் பகுதியை (பனிவெளிப் பகுதியை) சதுப்புச் சமவெளியாக மாற்றுகின்றது.

பனியாறுகள்

ங்கு நாம் எதிர்பார்க்கும் அளவுக்குப் பனி அதிகம் இல்லை. வட முனையின் சுற்றுப்புறத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை –50° F. கனடா, சைபீரியா, கிரீன்லாந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் இதைவிடக் குளிராக இருக்கும்.

உயர்ந்த மலைகள் கடலுக்கு அருகிலுள்ள இடத்தைத் தவிர, ஆர்க்டிக் கடற்கரையின் மற்ற இடங்களில் கோடையில் பனி இல்லாமலே இருக்கிறது. வட முனையில் நடுக்கோடையில் அரிதாகப் பனி பெய்யும். ஆனால், மழை உண்டு.