உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

வெளிவிடுவார். இதற்கு ஒரு மெட் (met) என்று பெயர். இது வளர்சிதை மாற்ற அலகு. கையில் 50 பவுண்டு எடையினைத் தூக்கிச் செல்லும் ஒருவர் 6 மெட்டு வெப்பத்தை வெளிவிடுவார். மிகக் கடுமையான நடுக்கத்தின்போது, 3 மெட்டு வெப்பம் வெளியாகிறது. இங்கு ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஆகும் செலவு ரூ. 534.

துணைக் கருவிகள்

உடல் முழுவதையும் வெப்பமாக வைக்கக் காலையும், கையையும் வெப்பமாக வைக்கவேண்டும். இதற்குப் பல பைகளைக் கொண்ட உடையினை அறிவியலார் உருவாக்கியுள்ளனர். இப்பைகளிலுள்ள சிறு மின்கலங்கள் உடலின் வெப்பநிலையைப் பாதுகாக்க உதவுகின்றன. வெப்பக் கையுறைகளும், காலணிகளும் அவ்வாறே உதவுகின்றன.

வெளியே எந்திரத்தைப் பழுது பார்ப்பது என்பது கடும் உறைபனிப் புண்ணை உண்டாக்கும். ஆகவே, பழுது பார்ப்பவர்களின் உறைகள் பிளாஸ்டிக் விரல் நகங்களைக் கொண்டிருக்கும். இதனால் திருப்புளி முதலிய கருவிகளைக் கையாள்வது எளிதாகும். மின்னாற்றலால் இயங்கக் கூடிய உறைகளும் செய்யப்பட்டுள்ளன.

காற்றும் ஒளியும்

பனிக்காற்று மணிக்கு 50 மைல் வேகத்தில் அடிக்கும். பகலவனிலிருந்து வெளியாகும் மின்னூட்டத் துகள்கள் புவிக்காற்று வெளியில் மோதுவதால், கண்ணையும் கருத்தையும் கவரும் ஒளிகள் இங்கு உண்டாகின்றன. இவை வடமுனை ஒளிகள் எனப் பெயர் பெறும்.