பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2o

வயிறு

தன் மனசினaல் அந்தத் தொடையைத் தோலுரித்து, அதன் சதையைத் துண்டங்களிட்டு, அவற்றைப் பானைகளில் போட்டு, சமைத்துச் சாப்பிட்டான். முடிவில்லாமல் தின்றான்.

அவன் வாயில் நுரை சாடியது. அவன் பயங்கரமாக மாறினான். அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவ்வேளையில் அவன் உண்மையில் ஒரு மிருகம் போலவே தோன்றினான். பசி எடுத்த வயிறு தவிர வேறு எதுவுமாக இல்லை அவன்.

இறுதிவரை அவன் அவ்வாறே உட்கார்ந்திருந்தான். அப்புறம், வண்டி நகர்ந்தது. அறுப்புக்காரன் அதன் பின்னால் போனான். வெட்டப்பெற்ற கட்டைகள் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது தச்சனுக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது. சூரியக் கதிர்களின் அடியில் மறைந்திருந்த ஒரு குளிர் ஊர்ந்து வந்து அவனைப் பற்றிக்கொண்டது. அவன் வீட்டுக்குள் போய், தனது பழைய பெரிய மேல்சட்டையை எடுத்துத் தன் உடம்பைப் போர்த்தினான்.

சில தினங்களுக்குப் பிறகு அவனுக்குக் கடுமையான நோய் கண்டது. அப்படி ஒரு துயரநிலையையும் எதிர்பார்த்திருந்த அவன் மனைவி, அந்தச் சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தபடி தன்னை அனுசரித்துக்கொண்டு, தனது இறுதிக் கடமைகளை நிறைவேற்றினாள். ஒருவன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடுவது போல், தச்சன் சிறிதளவு சூப்புக்காக ஏங்கினான். ஆனாலும், அந்தச் சொர்க்க உணவை அளித்து அவனைத் திருப்திப்படுத்துவதற்கு வகை எதுவும் இல்லை. மாறாக, உலர்ந்த செர்ரிப் பழங்கள் ஐந்தை ஊறவைத்த குளிர்ந்த நீரை, அவன் தாகத்தைத் தணிப்பதற்காக, அவன் மனைவி அவனுக்கு அளித்தாள்.

ஆனால், நோயாளி ஒரு பிளேட் சூப்பு வேண்டுமென்று அதிகாரமாகக் கேட்டான். காலை முழுவதும் அதைப்பற்றியே பேசினான். ஆவலோடு காத்திருந்தான்-எல்லாம் வீணாகத்தான்.

மதிய உணவுக்குக் கரடுமுரடான ரொட்டித் துண்டுதான் இருந்தது. சீக்காளி அதைத் தின்ன முயன்றான், ஆனால் அவனால் அதை விழுங்க இயலவில்லை.

சாயங்கால நேரத்தில், பக்கத்துவீட்டுப் பெண் ஒருத்தி, தச்சன் மனைவி குழப்பத்தோடு காணப்பட்டதைக் கவனித்தாள். அவள் அருகில் வந்து விசாரித்து, என்ன விஷயம் என்று புரிந்து கொண்டாள். அவள் இரக்கப்பட்டு, தன் மகளைப் பால்சாலைக்குத் தயிர் வாங்கி வரும்படி அனுப்பினாள். அங்குத் தயிர் இல்லை.