பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டி. தெமிர்ச்யன்

21

அதனால், சூப்புத் தயாரிப்பது மறுநாள் காலைக்கு ஒத்தி வைக்கப் பட்டது.

ஆனால் இரவில் தச்சனின் நிலைமை மோசமாயிற்று. ஜூரம் அதிகரித்து, அவன் புலம்பலானன். உணவைப்பற்றிய பேச்சை எடுக்காத அவனுடைய முதலாவது புலம்பல் அதுதான். முற்றி விட்ட ஜுரத்தில் சில எடுபிடிகள் எங்கே எடுத்துச் செல்லப் பட்டன என்று அவன் தன் மனைவியைக் கேட்டான். எந்த எடுபிடிகள், எங்கே எடுத்துச் செல்வது என்பது எதுவும் அவளுக்குப் புரியவில்லை. ஆகவே அவள் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. நோயாளி கண்களைத் திறந்து, மனைவியை நோக்கினான், அவளையே பார்த்தபடி, "அப்படியானால் நீ என்ன சாப்பிடுவாய்?" என்று கேட்டான். அவன் இன்னும் சூப்புக்காகக் காத்திருக்கிறான் என்று அவள் எண்ணினாள்.

"அது சீக்கிரம் வந்துவிடும். கொஞ்சம் பொறுத்திரு" என்று அவள் தச்சனுக்கு ஆறுதல் வார்த்தை கூறினாள்.

"நான் போன பிறகு நீ என்ன சாப்பிடுவாய்?" என்று தச்சன், தனது மரணத்தைக் குறிப்பிட்டபடி, திரும்பவும் கேட்டான்.

"கடவுளே, அது எனக்கு எப்படித் தெரியும்?" என்று அவள் துயரக்குரலில் முணுமுணுத்தாள்.

அவ்வேளையில் அண்டை வீட்டுக்காரி ஒரு தட்டு நிறைய சூப்பு எடுத்து வந்தாள். அதை மேஜைமேல் வைத்துவிட்டு, ஆராயும் கண்களால் சீக்குக்காரனை உற்றுநோக்கினாள்.

"அவள் சூப்புக் கொண்டு வந்திருக்கிறாள், உனக்கு வேண்டுமா?" என்று சீக்காளியின் மனைவி கேட்டாள்.

"அது உனக்குத் தெம்பளிக்கும்!”

"ஊம்?" என்று ஜுர வேகத்தில் அவன் கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தான்.

சூப்பு அருகில் கொண்டுவரப்பட்டது. ஒரு கரண்டியில் அதை எடுத்து அவன் உதடுகளில் வைக்கப்பட்டது. அவர்கள் தனக்கு உணவு ஊட்டுகிறார்கள் என்பது உள்ளுணர்வினால் நோயாளிக்குப் புலப்பட்டது. அவன் தன் உதடுகளைச் சுவைத்தான். ஆனால் உணவை உட்கொள்ளவில்லை. அவனுக்குப் பசி இல்லை.

அவனது வாழ்விலேயே முதல் முறையாக அவனுக்குப் பசி இல்லை. உலகம் மாறிவிட்டது. ஒரு காலத்தில் அக்கை வினைஞனது உடலமைப்பின் ஆனந்தமாகவும், பிற்காலத்தில் அவனுக்குத் தண்டனையாகவும் இருந்த பசியை அவன் இழந்துவிட்டான்.