பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

சர்க்கரைக் கிண்ணம்

அதிகமான உணர்வுக்கிளர்ச்சி கொண்டான். ஜனங்களும், திறந்த ஜன்னல்களை உடைய வீடுகளும், நகர்ந்து சென்ற வண்டிகளும், வானிலிருந்து பெய்த மழைத்துளிகளும், இனியனவாகத் தோன்றின. இவை தவிர அவன் வேறொன்றையும் உணர்ந்தான். எங்கோ ஒரு நிலவறையிலிருந்து, அல்லது ஏதோ ஒரு வீடு அல்லது உணவு விடுதியிலிருந்து உணவுப் பொருள்களின் சுவையான மணம் மிதந்து வந்தது; சூடாக ஏதேனும் உணவு உண்ணவேண்டும் என்ற ஆசையை அது தூண்டியது. ஆகவே, எதிர்ப்பட்ட முதல் உணவு விடுதிக்குள் அவன் நுழைந்தான். வயிறாற உண்ட பிறகு, திருப்தி அடைந்தவர்கள் இயல்பாகச் செய்வதுபோல், அவன் தனது நிலைமைகுறித்து எண்ணலானான் , அன்றைய இரவுப்பொழுதைக் கழிப்பதற்கு எங்கே போவது என்று அவன் நினைத்தான். அந்நகரில் அவனுக்கு உறவினர் எவரும் இல்லை. தேடிப் போவதற்கு உரிய நண்பர்களும் இல்லை. அவன் கையில் ஒரே ஒரு ரூபிள்தான் இருந்தது. அதில் முப்பது கோப்பெக் காசுகளைச் சாப்பாட்டுக்குக் கொடுத்துவிட்டான். லோரி வட்டாரத்திலிருந்து வந்து அந்த நகரத்தில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டிருந்த தனது ஊர்க்காரர்களே, ஒரு சிறிது அறிமுகமானவர்களே அவன் எண்ணிப் பார்த்தான், கான்னஸ் என்ற தையல்காரன் வீட்டுக்குப் போய், தனக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை சில நாட்களுக்கு உதவிபுரியும்படி அவனைக் கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால், ஒரு வருஷத்துக்கு முன்பு அந்தத் தையல்காரன் தன்னிடம் கோரிய உதவியை இவன் இது வரை செய்யவேயில்லை-அவன் கேட்ட மொச்சைப்பயறை ஊரிலிருந்து கொண்டு தரவேயில்லை என்பது நினைவுவந்தது. அப்புறம், செருப்பு தைக்கும் நிக்கொலாஸிடம் போக நினைத்தான். அதுவும் சாத்தியமில்லை என்று பட்டது. ஒரு தடவை ஒரு தகராறு எழுந்தபோது, இவன் அந்தச் செம்மானை பூர்ஷ்வா என்று பழித்தான்; அதனல் அவன் மிகவும் மனம் நொந்து போனன். பின்னர், மற்றுமுள்ள ஊர்க்காரர்களை எண்ணினான் - சார்கிஸ் என்ற வியாபாரி, ஒரு கடைச் சிப்பந்தியான பாக்ரத், மற்றும் கருமான் சைமன். ஆனால் அவர்கள் சம்பந்தப்பட்ட கசப்பான நிகழ்ச்சிகளும் அவனுக்கு நினைவுவந்தன. முடிவில், ஏபெல் என்ற கடைக்காரனிடம் நேரடியாகச் சென்று முயற்சி செய்யலாம் என்று அவன் தீர்மானித்தான். இறந்துபோன இவன் தந்தையை அவனுக்கு நன்றாகத் தெரியும். இவனுடைய தந்தைதான் அவனே ஊரிலிருந்து நகருக்கு இட்டுவந்து ஒரு ஆள் ஆக்கிவிட்டார். ஏபெல்தான் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவனாகத் தோன்றினான்.