பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்டீபன் ஸோரியன்

25

இப்போது அவன் லால் தாத்ஸ்கி பஜாரின் சந்தடியுள் புகுந்து கடைக்காரன் ஏபெலை நோக்கி உதவி கேட்பதற்காகப் போய்க்கொண்டிருந்தான். நடக்கும்போது, ஏபெல்பற்றி, மூன்று வருஷங்களுக்கு முந்தி இவன் போயிருந்த அவனது கடையைப்பற்றி, ஒரு தட்டு நிறைய ஆப்பிள்கள், ஒரு பீயர் பழம், ஒரு கட்டி வெல்லம் ஆகியவை தீட்டப்பட்டிருந்த அவனுடைய பெயர்ப்பலகைபற்றி எல்லாம் எண்ணினான். இப்படி எண்ணம் வளர்ந்ததனால், ஏபெல் தனக்கு உதவிபுரிய மறுக்கலாம் என்ற சந்தேகம் அவனுக்கு எழவேயில்லை.

"நிச்சயமாய் அவன் மறுக்கமாட்டான். ஏனென்றால் என் அப்பா அவனை ஆளாக்கிவிட்டிருக்கிறார், என் அப்பா உதவி செய்திராவிட்டால், அவன் இப்போது பழம் செருப்பு அணிந்து ஆடுகள் மேய்த்துக்கொண்டிருப்பான்... அவன் எனக்கு உதவி செய்ய விரும்பாவிட்டால், எனக்குச் செலவுக்குக் கொஞ்சம் பணம் கடனாகத் தரும்படி நான் அவனைக் கேட்பேன். அப்புறம் அதை அவனுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்...’’ இப்படி அவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான்.

மண்டைக்குள் இவ்வித நினைப்புகள் குடைய, அவன் ஏபெலின் கடையை அடைந்தான். ஜன்னலின் முன்னால் நின்று உள்ளே கவனித்தான். கடையில் வேலைக்காரப் பையன் ஒருவன் மட்டுமே இருந்தான். அவன் எதையோ வாயில் போட்டு அவசரமாகச் சுவைத்துக்கொண்டிருந்தான். இளைஞன் உள்ளே நுழையலாமா வேண்டாமா என்று முதலில் தயங்கினான். ஆனல், பின்னர் தனது நிலையைத் தெளிவாகப் புரிந்துகொண்டு இரவைக் கழிப்பதற்கு இடம் எதுவும் இல்லை; சாப்பாட்டுக்குச் செலவு செய்யப் பணமும் இல்லை என்பதை உணர்ந்து-அவன் துணிவுகொண்டான். உள்ளே போனான்.

அவனைக் கண்டதும் சிறுவன், வாயில் கிடந்த 'சூயிங் கம்’மை அவசரமாக வெளியே எடுத்து, அதைத் தன் சட்டைப் பைக்குள் திணித்தான்.

"என்ன வேண்டும்?’’ என்று அவன் அதட்டலாய்க் கேட்டான்.

இளைஞன் ஒரு கணம் தயங்கினான்.

"மிஸ்டர் ஏபெலை, உன் முதலாளியை, நான் பார்க்க வேண்டும். அவர் இங்கே, உள்ளே, இருக்கிறாரா?" என்று முணுமுணுத்தான்.

"அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். நான் அவரைக் கூப்பிடவேண்டுமா?’’