பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சர்க்கரைக் கிண்ணம்

இளைஞன் மீண்டும் தயங்கினான். வேளைகெட்ட வேளையில் அவன் அங்கே வந்திருந்தான். சிறிது காலம்தாழ்த்தி வந்திருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும்.... ஆனாலும் பரவாயில்லை. அவரது சாப்பாட்டுக்கு இடைஞ்சல் இல்லை என்றால், பையன் முதலாளியைக் கூப்பிடலாம்தான்.

சிறுவன் மெதுவாகக் கடையின் உட்புறம் நகர்ந்தான். இளைஞன் கடைப் பலகையை நெருங்கி, ஏபெல் வருகிற வரையில், அங்கிருந்த ஒரே மாதிரியான சர்க்கரைக் கிண்ணங்களைப் பார்வையிடலானான் மூடிபோட்ட கிண்ணங்கள் வழக்கமாக நாட்டுப்புறப் பாதிரிமார்களும், நகரத்து மாதாகோயில் அதிகாரிகளும் மட்டுமே உபயோகிக்கக்கூடியவை அவை. அவன் ஒவ்வொன்றாய் மூடியைத் திறந்து சிரத்தையில்லாமலே நோக்கினான். ஏபெல் தன்னை அடையாளம் காண்பது சிரமம்தான் என்று எண்ணினான். அவர்கள் முன்பு சந்தித்ததுக்குப் பிறகு மூன்று வருஷங்கள் ஒடியிருந்தன. ஆனால், தன்னைக் கண்டுகொண்டால் அவன் சந்தோஷப்படுவான். ஏனெனில் இவனது தந்தையின் உதவியால் தான் ஏபெல் இப்படி ஒரு கடைக்குச் சொந்தக்காரனாக முடிந்திருக்கிறது. சந்தேகம் வேண்டியதில்லை. அவன் மறுக்க மாட்டான். தனக்கு உதவி செய்வான்,

"ஆனால், நான் திருடிவிட்டு ஜெயிலில் இருந்தேன் என்று அறிந்தால், அவன் உதவாமல் போகலாம்" என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டான். நான் குற்றம்புரியாதவன், குற்றமற்றவன் என்ற முறையில் விடுவிக்கப்பட்டவன் என்பதை அவன் ஒருபோதும் நம்பமாட்டான். ஜெயிலிலிருந்து விடுவிக்கப் பட்டவர்களின் குற்றமற்ற தன்மையை ஜனங்கள் நம்புவதில்லை. அவன் கடையைவிட்டு வெளியே போய்விட விரும்பினான்; தனது ஊர்க்காரன் தன்னைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டாமே என்று நினைத்தான். ஆயினும் அப்புறம் அவன் இல்லாதபோது அவனப்பற்றி அவர்கள் மிக மோசமான விஷயங்களைக் கூறக்கூடும் என எண்ணி அவன் அங்கேயே நின்றான்.

அந்த நேரத்தில்தான், தடுப்புச் சுவரின் பின்புறமிருந்து வேகமான காலடிகளின் சத்தம் கேட்டது. அவர்கள் தன்னைச் சந்தேகிக்கக் கூடாது என்பதற்காக, இளைஞன் சர்க்கரைக் கிண்ணத்தின்மேலே வைத்திருந்த கையோடு அசையாது நின்றான்.

நடுத்தர வளர்த்தி உடைய ஒரு மனிதன், கைகளை அகட்டி வைத்தபடி (அவற்றில் உணவு படிந்திருக்கும் என்று தோன்றியது) வந்தான். சரியான லோரி வட்டாரத்து ஆசாமி.