பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாகன் டோடோவென்ட்ஸ்

33

விரைவிலேயே ஒட்டகக் கூட்டம் மீண்டும் தன் வழியே போகிறது. ஒட்டகங்களின் கம்மலான, துயரம் தேங்கிய, தேடித் தவிக்கிற நெடுங்குரல்களால் நகரம் முழுவதும் நிறைந்து விடுகிறது.

***

ஆனால் ஒட்டகங்களில் ஒன்று அசைய மறுக்கிறது. அது எழுந்து நிற்கவில்லை. தரையில் கிடந்தபடி வெறுமனே பார்க்கிறது.

காவலர்கள் அதைச் சுற்றிக் கூடுகிறார்கள். அதன் கண்களின் ஆழத்தினுள் ஊடுருவிப் பார்த்து அதனுடைய அந்தரங்க உணர்வை முழுமையாகப் புரிந்துகொள்கிறார்கள்-ஒரு முரண்டு அதைப் பற்றிக்கொண்டுவிட்டது. அதற்கு உணவளித்து அதைக் கவனித்துவரும் காவலன் ஒட்டகக் கூட்ட முதலாளியின் கோபத்தை எண்ணிப் பயந்தவனாய் வெளிறிப்போகிறான்.

அந்த ஆள் செய்த ஏதோ ஒரு காரியத்தினால் அவ் ஒட்டகம் மனவேதனை கொண்டிருக்கிறது. முதலாளி திரும்பி வருகிறான்.

"இதன் முரண்டு தணிகிற வரை நீ இதன் கூடவே இங்கே தங்க வேண்டும். பிறகு எங்களோடு வந்து சேர்ந்துகொள்’’ என்று அவன் கட்டளையிடுகிறான்

காவலன் அதற்குக் கட்டுப்படுகிறான் ஒட்டகக் கூட்டத்து மணிகளின் ஒசை மீண்டும் ஒலிக்கிறது. முரண்டு பிடித்த ஒட்டகம் தனது தலையைத் திருப்பி, விலகிச் செல்லும் தன் தோழர்களை வெகுநேரம் கவனிக்கிறது. பிறகு நீண்ட துயரக் குரல் ஒன்றை எழுப்புகிறது. முதலாளி ஒட்டகக் கூட்டம் முழுவதையும் நிறுத்தினான். ஒருவேளை அந்த ஒட்டகம் தனியே விடப்படுவதை விரும்பவில்லை போலும். ஆனால் அப்படியில்லை. அது உட்கார்ந்தே இருக்கிறது. எழுந்து நிற்க மறுக்கிறது. மறுபடியும் ஒட்டகக் கூட்டம் நகர்கிறது. மெசபடோமியா போகிற வழியே, பாபிலோனியா மற்றும் அராபியப் பாலைவனங்களை நோக்கி, அது செல்கிறது.

முரண்டு பிடித்த ஒட்டகத்தின் காவலன் தனது ரோம உடையைக் கழற்றி அதன் அருகில் வைக்கிறான். தன் போர்வையின் அடியில் சுருண்டு மடங்கித் தூங்கிவிடுகிறான். அவன் விழித்தெழுகிற நேரத்திற்குள், அந்த ஒட்டகம் தன் மனக்குறையை மறந்துவிடும்; சாயங்காலத்திற்குள் அவர்களும் ஒட்டகக் கூட்டத்துடன் போய்ச் சேர்ந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு.

ஆ-3