பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

ஒரு ஆர்மேனியன் குழந்தைப்........சில காட்சிகள்

ஒலிகளை எழுப்புகிறது. பெருமூச்சு விடுகிறது. எழத் தொடங்குகிறது.

நாங்கள் மகிழ்ச்சியோடு கத்துகிறோம்.

"ஒட்டகம் எழுந்துவிட்டது! ஒட்டகம் எழுந்துவிட்டது!"

காவலன் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, நாங்கள் அவனுக்காக எடுத்து வந்திருந்த ரொட்டியைச் சேகரிக்கிறான். ஒட்டகத்தின் சேணத்தைப் பற்றிக்கொண்டு, மேலே ஏறுகிறான். புன்னகை பூத்து, சந்தோஷத்தோடு, பாலை நிலத்தை நோக்கிப் பயணப்படுகிறான்.

தெருவின் இருபுறமும் மக்கள் நின்று, முரண்டுபிடித்த ஒட்டகத்தைக் கவனிக்கிறார்கள். அது நடந்தவாறே புலம்பிக் கொண்டு, வெகுவெகு தொலைவில் தன் கண்களைப் பதித்தபடி நடக்கிறபோது ஆடி அசைகிறது.

காவலன் தெரு ஓரங்களில் நின்ற மக்களுக்கு வணக்கம் தெரிவிக்கிறான். அவர்கள் அவனுக்காக வீசிய காசுகளைச் சேகரிக்கிறான். ஒரு பையை ரொட்டியால் நிரப்புகிறான். நகரத்தை விட்டு நீங்கி, மணல் பரப்பை நோக்கி, சூரியனை நோக்கி, நகர்ந்து போகிறான்.

சிவப்பும் மஞ்சளுமான இலைகளைக் கொண்ட இலையுதிர் காலத்துக்குப் பிறகு, கடுமையான மாரிக்காலம் தொடங்கியிருக்கிற ஒரு நாட்டை விடுத்துச் செல்கிறான் அவன்.