பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்செல் பாகுன்ட்

41

கண்டுபிடித்துவிட்டதாக ஆய்வாளன் கீழே பார்த்துக் கத்திய போது, அவன் என்ன சொல்கிறான் என்று கலைஞனுக்குப் புரிய வில்லை. கழுகுகள் பறப்பதை, அவை தங்கள் இறக்கைகளை வேகமாக அடித்துக் கொள்வதையே அவன் கவனித்துக் கொண்டிருந்தான். அவற்றின் வளைவான, ரத்தச் செந்நிற அலகுகளால் அவன் வசீகரிக்கப்பட்டான். அவை வட்டமிடுவதில் ஒருவகை காம்பீர்யம் இருந்தது.

தன் தலையிலிருந்த தொப்பி நழுவி, ஒரு பாறைமீது விழுந்ததை அவன் கவனிக்கவில்லை.

ஒரு குடியானவன் ஒரு தடிக்கம்பை ஊன்றிக்கொண்டே பாறைச் சரிவுகளில் ஏறிவந்தான். அவன் இடுப்பு வாரில் ஒரு அரிவாள் சொருகப்பட்டிருந்தது. தலையைச்சுற்றி ஒரு அழுக்குக் கைக்குட்டையைக் கட்டியிருந்தான். அவன் வழிகாட்டியின் அருகில் சென்றான்.

கண்ணாடி அணிந்தவன் ஒரு பாறையை அகற்றுவதை அவன் பார்த்திருந்தான். அந்த அந்நியர்கள் யார் என்றும், இடிபாடுகளுக்கிடையே அவர்கள் என்ன தேடுகிறார்கள் என்றும் அவன் வழிகாட்டியைக் கேட்டான். வழிகாட்டிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பிறகு, ஒரு ஜாடி நிறையத் தங்கக் காசுகள் காகவபெர்தா சிகரத்தின் ஒரு இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்று அவன் கூறினான்.

குடியானவன் சிந்தனையில் ஆழ்ந்தான். அப்புறம் அவன் தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டு, பள்ளத்தாக்கை நோக்கிக் கீழே இறங்கினான். அவனது வயலில் விளைந்த தினைக்கதிர்களை அவன் அறுத்தாகவேண்டும். நடந்தபோது அவன் தனக்குத் தானே பேசிக்கொண்டான். மறைந்திருந்த புதையலலை அவன் கண்டுபிடித்திருந்தால் அது எத்தகைய அதிர்ஷ்டம் ஆகும். அந்தக் கண்ணாடிக்காரன் நகர்த்திய அதே பாறைமீது அவன் எத்தனை தடவை உட்கார்ந்திருந்தான். புதையல் விஷயம் முன்பே அவனுக்குத் தெரிந்திருந்தால், அவனுடைய பைகளில் தங்கக் காசுகள் குலுங்குமே. ஆ, எத்தனை பசுக்களை அவன் வாங்க முடிந்திருக்கும். இவ்வாறு எண்ணியபடி அவன் தன் வயலை அடைந்தான். தனது நீண்ட சட்டையைக் கழற்றிவிட்டு, பயனற்ற நினைப்புகளையும் ஒதுக்கிவிட்டு, அவன் கை நிறைய தினைக்கதிர்களைப் பற்றிக்கொண்டு அறுக்க ஆரம்பித்தான்.

இடிபாடுகளுக்கிடையே வயலட் பூ ஒன்று பூத்திருந்தது. ஆனால் புதைபொருள் ஆய்வாளன் அந்தக் கரும்சிவப்பு நிறப்