பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்செல் பாகுன்ட்

43

ஒன்றை வெளியே தள்ளினaன். அதை அடுப்புக் கல் ஒன்றின்மீது ஆறவைத்தான்.

அவன் தாய் உள்ளே வந்தாள். தலைக்குட்டையைக் கண்களுக்கும் கீழே தொங்கும்படி இழுத்துவிட்டாள். மூலைக்குப் போனாள். அங்கிருந்த படுக்கைகளின் குவியலிலிருந்து இரண்டு திண்டுகளை வெளியே எடுத்து, விருந்தாளிகள் அமருவதற்காகப் போட்டாள்.

ஆய்வாளனின் பெரிய பைக்குள்ளிருந்து உணவுப் பொருள் டப்பா ஒன்றை வழிகாட்டி எடுத்தான்.

"என் சகோதரியே, நாங்கள் பசியோடு இருக்கிறோம். உன்னிடம் தயிர் இருந்தால் எங்களுக்குக் கொஞ்சம் கொடுக்க மாட்டாயா? தேநீரும் தயாரித்துத் தரமாட்டாயா? எங்களிடம் சர்க்கரை இருக்கிறது’’ என்று அவன் சொன்னான்.

அம் மங்கை அடுப்பருகே சென்றாள். உள்ளே கிடந்த காளான்களை அகற்றிவிட்டு, அனல்மீது குனிந்து, கங்குகளை ஊதினாள். அவள் தலையிலிருந்து குட்டை நழுவி விழுந்தது. அவளுடைய வெள்ளை நெற்றியும், கன்னங்கருத்த கூந்தலும், கரிய கண்களும் கலைஞன் பார்வையில் பட்டன. புகையும் அடுப்பையும், கங்குகள்மீது குனிந்திருந்த பெண்ணையும் விட்டுத் தன் கண்களை அவனால் அகற்ற இயலவில்லை. இந்த முகத்தை முன்பு அவன் எங்கே கண்டிருக்கிறான்? இதே பளிங்கு நெற்றி, இதே கரும் வயலட் கண்கள். அந்தப் பெண் ஒரு முக்காலியை எடுத்து நெருப்பின்மேல் வைப்பதற்காக எழுந்தபோது, அவள் கண்களும், அவளுடைய புருவங்களில் படிந்திருந்த வெண்சாம்பல் தூசியும், தலைமுடியும் அவனிடமிருந்து மிகச் சிறிதே விலகியிருந்தன.

எத்தனையோ வருஷங்கள் ஓடியிருந்தன! ஏதேனும் இரண்டு முகங்கள் ஒரே மாதிரி இருக்க முடியுமா? அவற்றின் வாய் அமைப்புகூட ஒரே மாதிரி இருந்தது.

இந்தப் பெண்ணின் முகம் வெயிலால் கறுத்திருந்தது. ஆனாலும் இவள் கண்கள் அந்த இன்னொரு பெண்ணின் கண்களை ஒத்திருந்தன. இரண்டுபேருக்கும் ஒரே மாதிரி மெலிந்த இடையும் கொடி உடலும்தான் விரைவாகவும் அமைதியாகவும் நகர்ந்தபடி அவள் அவர்களுக்குத் தேநீர் தயாரித்தாள், அவள் குனிந்து எழுந்த ஒவ்வொரு முறையும், அல்லது வைக்கோல் பாய்கள் மீது அவள் நடந்து போகையில், அவளுடைய கைகளில் கிடந்த வெள்ளிக் காப்புகள் சிறு மணிகள்போல் மெல்லொலி எழுப்பின; அவளது நீண்ட ஆடை மெதுவாகச் சரசரத்தது.