பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

ஆல்ப் மலை வயலட் பூ

அப் பெண் மறுபடியும் கெட்டிலை நிரப்பினாள். தனது குறும்பு மகனைப் பார்த்துச் சந்தோஷமாகப் புன்னகைத்தாள்.

அவள் புன்முறுவல் கலைஞன் பார்வைக்குத் தப்பவில்லை. அது ரொம்பவும் பழக்கம் உள்ளதாகத் தோன்றியது. இரண்டு பேர் ஒரே மாதிரி இருக்கிறபோது, அவர்களது இளமுறுவலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். முதலில், பெண்ணின் மேலுதடு துடித்தது; பின் அவள் உதடுகள் விரிந்தன; முறுவல் கண்களில் ஒளியேற்றியது.

கலைஞன் தனது சித்திர ஏட்டைப் பைக்குள்ளிருந்து சுண்டி இழுத்தான், பாறைகளும் பிற வரைபடங்களும் நிறைந்த தாள்களைப் புரட்டினான்; பிறகு, நெருப்பருகே அமர்ந்திருந்த பெண்ணை நேர்த்தியாக வரைந்தான்.

அவள் உருவத்தின் புறக்கோடுகள் அவனுக்குப் பழக்கமானவை; அவன் மனக்கண்ணினால் அவன் அவற்றை அநேக தடவைகள் தீட்டிப் பார்த்திருக்கிறான்.

பையனைத் தவிர வேறும் எவரும் அவனுடைய ஏட்டில் உள்ள சித்திரத்தைப் பார்க்கவில்லை. ரோமத் தொப்பி அணிந்த ஆளுக்குச் சொந்தமான ஏட்டின் வெள்ளைத் தாள்கள், அனைத்தையும் எடுத்துக் காட்டுகிற நீரூற்றின் தெளிந்த நீரைப்போல், ஒவ்வொரு பொருளையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக அக் குழந்தைக்குத் தோன்றியது.

சிறிது நேரத்துக்குப் பிறகு, வழிகாட்டி குதிரைகளைக் கொண்டுவந்தான். கடிவாளங்களை மாட்டி, இடுப்பு வார்களை இறுக்கி, சேணப் பையைப் பிணைத்துவிட்டு, அவன் அந்தப் பெண்ணிடம் விடை பெறுவதற்காகத் திரும்பிச் சென்றான். அவள் எழுந்து தன் தலைக்குட்டையை வேகமாக நெற்றிக்கு மேலே இழுத்துவிட்டாள். முன்னே நீண்ட அவனது கையை அவள் விரல் நுனிகள் லேசாகத் தொட்டன. மற்ற இருவரும் தங்கள் கைகளை நீட்டினார்கள். ஆனால் அவளோ தன் கையைத் தனது நெஞ்சின்மீது அழுத்திக்கொண்டு தலையைத் தாழ்த்தி அவர்களுக்கு விடை கொடுத்தாள்.

கலைஞன் சிறுவனுக்குச் சில வெள்ளிக் காசுகள் கொடுத்து அவன் தலையை வருடினான்.

மூன்று குதிரைகள் காகவபெர்தாவின் பாறைச் சரிவுகள் வழியே கீழிறங்கி, அடியிலுள்ள பள்ளத்தாக்கை நோக்கி நடந்தன. மலைமீது குதிரை சவாரி செய்த மூன்று மனிதர்களும் தனித்தனியே அவரவர் எண்ணங்களில் ஆழ்ந்திருந்தனர்.