பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்செல் பாகுன்ட்

47

வழிநெடுக வயலட் பூக்கள் மலர்ந்திருந்தன. கலைஞன் தன் சேணத்திலிருந்து வளைந்து குனிந்து ஒரு பூவைப் பறித்தான். அதைத் தனது சித்திர ஏட்டில், அடுப்பருகே மெலிந்த பெண் ஒருத்தி இருந்த படம் தீட்டப்பட்ட பக்கத்தில் வைத்துக் கொண்டான்.

குதிரைகளின் குளம்புகளுக்குக் கீழே கற்கள் சிதறின. அவை இடுக்குகளுக்குள்ளே ஒசையிட்டு உருண்டன.

கலைஞன் உள்ளத்தில் ஒரு கடல் புரண்டது. அது தனது கரைகள் மீது முதலில், கறுப்பு வெல்வட் தொப்பி அணிந்த அழகிய தலை ஒன்றை மேலே உயர்த்தும்; பிறகு கனத்த குழல் கற்றைகள் முதுகில் தொங்க நீண்ட ஆடை அணிந்த ஒரு பெண்ணைக் காட்டும்; அப்புறம், ஒரு கோட்டையின் இடிபாடுகளையும், அதன் சுவர்களினடியில் மலர்ந்திருக்கும் கரும் சிவப்புப் பூக்களையும் பிரதிபலிக்கும்.

***

அந்தி மயங்கியது.

ஒரு மனிதன் மலைமேல் உள்ள அதே பாதையில் ஏறிக் கொண்டிருந்தான். அவன் இடுப்பு வாரில் ஒரு அரிவாள் சொருகியிருந்தது. அவன் களைத்திருந்தான். நாள் முழுவதும் அவன் தினைப்பயிரின் கட்டையான தண்டுகளை அறுத்துக்கொண்டிருந்தான். அவன் முதுகு வலித்தது. ஆகவே அவன் மெதுவாக அடி எடுத்து வைத்தான். தனது கைத்தடியின் மீது அழுத்தமாகச் சாய்ந்து, மூச்சு வாங்குவதற்காக அடிக்கடி நின்றான். அப்படி நின்றபோதெல்லாம் அவன் மு. ழ ங் கா ல் க ள் நடுங்கின. கோட்டையில் மறைந்துகிடந்த புதையலைப்பற்றி வழிகாட்டி தெரிவித்தானே, அதே ஆள்தான் அவன். குதிரைக்காரர்கள் சவாரி செய்து கீழே செல்வதை அவன் தன் வயலிலிருந்து தலை நிமிர்ந்து பார்த்திருந்தான். அவர்களுடைய சேணப் பைகளில் தங்கம் நிறைந்திருந்ததாக அவனுக்குத் தோன்றியது. அவனுடைய வெள்ளாடுகளும் செம்மறிகளும் இடிபாடுகளிடையே மேய்ந்துகொண்டிருந்த வேளைகளில் அவன் உட்கார்ந்திருந்த அதே பாறையின் அடியில் பல நூற்றாண்டுக் காலமாகப் புதைந்துகிடந்த தங்கம் அது. இந்த எண்ணம் அவன் மன அமைதியைக் கெடுத்ததாலோ, அல்லது அவன் வெகுவாகக் களைத்திருந்ததனாலோ, மாலைநேர வேட்டையின் போது பசித்து அலையும் ஒரு கரடி மாதிரி அவன் எரிச்சல் அடைந்திருந்தான்.