பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஆல்ப் மலை வயலட் பூ

அவன் முதல் குடிசையை அடைந்ததும், அவனே வரவேற்க வெளியே ஓடிவந்த நாயை எட்டி உதைத்தான். தனது இடுப்பு வாரிலிருந்த அரிவாளை எடுத்து ஒரு மூலையில் வீசி எறிந்தான். பிறகு, தடிக்கம்பை அடுப்பருகே சாத்திவிட்டு அவன் பாய்மீது அமர்ந்தான்.

அடுப்புப் புகைந்துகொண்டிருந்தது. கெட்டில் கொதித்துக் கொண்டிருந்தது. இரண்டு சர்க்கரைக் கட்டிகள் ஒரு திண்டின் மேல் கிடந்தன.

கதிர் அறுப்பவன் தன் காலணிகளைக் கழற்றி, அவற்றிலிருந்த பதர்களை வெளியே அகற்றி முடிப்பதற்குள், அவன் மனைவி வந்து சேர்ந்தாள். அவளுடைய கைவளைகள் ஒலி எழுப்பின. நீண்ட ஆடையின் மடிப்புகள் சரசரத்தன. அவள் மகன், காலி டப்பாக்களைக் கைகளில் அணைத்தவாறு அவள் பாவாடையைப் பற்றியிருந்தான்.

தன் பொக்கிஷங்களைக் காட்டுவதற்காக அவன் தந்தையிடம் ஒடினான். குதிரையில் வந்தவர்கள் தனது பாய்மீது உட்கார்ந்திருந்தார்கள் என்று அந்த மனிதனுக்கு சட்டென்று புலனாயிற்று. அப்புறம், கருணையுள்ள அந்நியன் தந்த வெள்ளிக் காசுகளைச் சிறுவன் அவனிடம் காட்டினான்.

அம் மனிதன் பையனை தூரத் தள்ளினான், டப்பாக்களை விசிறி அடித்தான். பையனைப் போலவே அவை உருண்டு புரண்டன. ஆனால், சிறுவன் துள்ளி எழுந்து அவற்றை மறுபடியும் பொறுக்கிக்கொண்டான். அப்புறம் தாயின் பாவாடையில் முகத்தைப் புதைத்து அவன் அழுதான். தந்தை அவனுக்காக வருத்தப்பட்டான். அவன் சிறுவனைக் கூப்பிட்டு, காசுகளைக் காட்டும்படி கேட்டான். பையன், அழுகையுடன் சிரிப்பும் சேர, காசுகளைத் தன் கையில் பொத்திக்கொண்டு அவன் அருகில் வந்தான். வெள்ளைத் தாள்களோடு மினுமினுத்த ஏதோ ஒன்றை அந்நியன் தனது சட்டைப்பையில் வைத்திருந்தான் என்று அவன் தந்தையிடம் சொன்னான். தனக்குக் காசுகள் தந்த மனிதன் அதன் பக்கங்கள் ஒன்றில் தன் அம்மாவின் படத்தை வரைந்து எடுத்துப் போனதையும் கூறினான்.

குடியானவனின் குமுறும் உள்ளத்தில் மின்னல் போல் பொறாமை பாய்ந்தது. அவன் பரக்க விழித்தான். முகம் வெளிறியது. அந்தப் பெண் தன் மகனை நோக்கினாள். முகம் சிவந்தாள். அவள் கன்னங்களில் செம்மை படிவதை அவள் புருஷன் கவனித்தான். அடுத்த கணம் அவன் எழுந்து நின்றான்.