வாக்தாங் அனான்யன்
(1905)
துரோகி
மாரிக்காலத்தின் ஒரு குளிர்ந்த நாளில் நாங்கள் ஓய்வு பெறுவதற்காக, பெர்சிய எல்லை அருகிலிருந்த மலையடிவாரக் குக்கிராமம் ஒன்றில் தங்கினோம். அங்கே இரவைக் கழித்துவிட்டு மறுநாள் காலையில் மலை ஆடுகளை வேட்டையாடப் போகலாம். என்று எண்ணினோம். நெட்டையாக உயர்ந்திருந்த ஒருவன் வீட்டில் நாங்கள் தங்கினோம். அவன் முகம் கோணலாய், வெளிறியும் வருத்தமாகவும் காணப்பட்டது. அதன் ஒரு பகுதி துண்டில் மூடுண்டிருந்தது.
சுடர்விட்டு எரியும் கணப்பின் முன்னே நான் கிழக்கத்திய முறையில் உட்கார்ந்து, எனக்குப் பிடித்தமான பாணியில் வேட்டையையும் வேட்டைக்காரர்களையும்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.
“நான்கூட முன்னொரு காலத்தில் வேட்டைக்காரனாக இருந்தேன். ஆனால் அதை விட்டுவிட்டேன். அது ஒரு அயோக்கியத் தொழில்” என்று வீட்டுக்காரன் பெருமூச்சுடன் சொன்னான்.
“ஒருவர் வேட்டையாடுவதை நிஜமாகவே விட்டுவிட முடியுமா?” என்று என் கூட்டாளி கேட்டான்.
அந்த மனிதன் மறுபடியும் நெடுமூச்சு உயிர்த்தான்.
“மிகப் பெரிய பாம்பு ஒன்று என் வேட்டைக்கு முடிவு கட்டிவிட்டது.”
“இது சுவாரஸ்யமாக இருக்கிறதே” என்று நான் நினைத்தேன்.
பேசாமல் இருந்த வீட்டுக்காரன், எங்கள் வற்புறுத்தலுக்கு இணங்கி, இறுதியாக மனமிளகி, பின்கண்ட கதையைச் சொன்னான்: கணப்பருகே அமர்ந்து, தனது ஹுக்காவைப் புகைத்தபடி அவன் சாவதானமாகக் கூறினான்.
“ஒரு காலம் இருந்தது” என்று அவன் ஆரம்பித்தான். “அப்போது என் முகம் கோணியிருக்கவில்லை. ஜனங்கள்