பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

பாஸ்கரத் தொண்டைமான்


திருமலை முருகன்


இன்று தமிழ்நாட்டிலல் கோயில் திருப்பணிகள் ஏராளமாக நடக்கின்றன. சமீபத்தில் மதுரை மீனாக்ஷி கோவிலில் இருபத்தைந்து லக்ஷம் ரூபாய் செலவில் திருப்பணி நடந்தது. குடமுழுக்கும் நடந்தது. அதைப் பற்றியும், அப்பணியில் ஈடுபட்ட பெருமக்களைப் பற்றியும் விரிவாகப் பலர் பேசுகிறார்கள். இந்தத் திருப்பணிக்கே இத்தனை மகத்துவம் என்றால், ஒரு கோயிலையே கட்டியவர்களை கோயிலில் வைத்தே கும்பிடலாம் போல் இருக்கிறது. பல்லவமன்னன், ராஜசிம்மன், காஞ்சியில் கைலாசநாதருக்கு ஒரு கலைக் கோயிலைக் கட்டியிருக்கிறான். தஞ்சையில் ராஜராஜ சோழன் பெரு உடையாருக்கு ஒரு பெரிய கோயிலையே கட்டியிருக்கிறான். பராக்கிரம பாண்டியன் தென்காசியில் காசிவிசுவநாதருக்கு ஒரு கற்கோயிலைக் கட்டியிருக்கிறான். மதுரை மீனாக்ஷி கோயிலின் பெரும் பகுதியைத் திருமலை நாயக்கரே கட்டியிருக்கிறார் என்றெல்லாம் சரித்திர ஏடுகள் பேசுகின்றன. ஆனால் ஒரு கோயிலுக்குத் திருப்பணி செய்ததும் அக்கோயில் நிர்வாகங்கள் எல்லாம் சரிவர நடைபெற நூற்றைம்பது கோட்டை விரைப்பாடும், தோப்பும் நிலமும் தேடி வைத்ததும் ஒரு சாதாரணப் பெண் பிள்ளை என்று அறிகிற போது நாம் அப்படியே அசந்து விடுகிறோம். அப்படி ஒரு திருப்பணி செய்தவர் தாம் சிவகாமி ஆத்தாள் என்னும் மறவர் குலப்பெண். அத்திருப்பணி நடந்த தலம் தான் செங்கோட்டையை அடுத்த திருமலை முருகன் கோயில்.

இனி இக்கோயில் உருவான வரலாற்றையும் அங்கு திருமலை முருகன் கோயில் கொண்ட திறத்தையும் அக்கோயிலுக்குச் சிவகாமி ஆத்தாள் செய்த சேவையையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம் தானே.