பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

79


திருமலை ஒரு சிறிய மலைதான். அந்த மலையிலே ஒரு சுனை இருக்கிறது. அதனைப் பூஞ்சுனை என்கின்றனர். அச்சுனையின் கரையிலே ஒரு புளிய மரம் நிற்கிறது. அதனையடுத்து சப்தகன்னிமார் கோயில் ஒன்றும் இருக்கிறது. அக்கோயில் அர்ச்சகர் ஒருவர் பூசைகளை முடித்து விட்டுப் புளிய மரத்தடியில் வந்து இளைப்பாறுகிறார். அங்கு தலையைச் சாய்த்தவர் துங்கிவிடுகிறார். இவரது கனவில் முருகன் தோன்றி இம்மலைக்கு வடபக்கம் ஓடும் அனுமன் நதிக்கரையில் கோட்டை மேடு என்ற இடத்தில் மண்ணால் புதையுண்டு கிடக்கிறோம். நம்மை எடுத்துவந்து மலை மீது பிரதிஷ்டை பண்ணினால் உங்கள் அரசனது பிணிதீரும் என்கிறார்கள் அதனையே உத்தண்ட வேலாயுதம், ஆதிமூல நிலையம் என்று இன்றும் அழைக்கிறார்கள்.

பல வருஷங்கள் கழிகின்றன. நெடுவேலி என்ற கிராமத்தில் மறவர் குலத்தில் ஒரு பெண் பிறக்கிறாள். அவளுக்குச் சிவகாமி என்று பெயர் சூட்டப்படுகிறது. நாளும் வளர்ந்து மங்கைப்பருவம் அடைகிறாள் அவளை கங்கை முத்துத்தேவர் என்பவர் மணக்கிறார். அவளுக்கோ, முருகனிடத்தில் அபார பக்தி. ஆதலால் துறவறம் பூண்டு செவ்விய நெறியிலே வாழ்கிறாள். தன் கணவன் இறந்த பின் தன் சொத்துக்கள் அத்தனையும் திருமலை முருகனுக்கே சாஸனம் செய்து கொடுத்து விடுகிறாள் அவள்தான் அக்கோயிலைக் கட்ட முனைந்திருக்கிறாள். மலையடிவாரத்திலுள்ள வண்டாடும் பொட்டல் என்ற இடத்திலே ஒரு சத்திரம் அமைத்து, அதில் இருந்து மலைக்கு வருபவர்களுக்கு ஆகாரமும், நீர் மோரும் கொடுத்திருக்கிறாள். மலைமேல் செல்கிறவர்கள் கையில் ஆளுக்கு ஒரு செங்கல்லும் ஒரு ஓலைப் பெட்டியில் கொஞ்சம் சுண்ணாம்பும் கொடுத்து மலை மீது எடுத்துச் செல்லச் சொல்லியிருக்கிறாள். இந்த விதமாகவே செங்கல்லும், சுண்ணாம்பும் மலை மீது வந்து குவிந்து கோயில் உருவாகியிருக்கிறது. (இன்று மலைமேல் நடக்கும் திருப்பணிக்குச் செங்கல்லை ஆண்களும் பெண்களும் சுமந்து செல்கிறார்கள். நூறு செங்கல் கொண்டு செல்ல கிட்டத்தட்ட ஆறு தடவை மலை ஏற வேண்டியிருக்கிறது அதற்குக் கூலி ரூ.1.25 என்கிறார்கள் (ஆம் அன்று மதுரையில் உள்ள சொக்கலிங்கம் பிட்டுக்கு மண்சுமந்தார் இன்றோ நம் மக்கள் துட்டுக்கு மண் சுமக்கிறார்க்ள்) இப்படித்தான் திருமலைக்குமரன் கோயில் சிவகாமி ஆத்தாளால்" முதலில்