பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

81


வணங்க கோயிலுள் செல்லலாம். புதிய பாதையில் சென்றால் நேரே கோயில் வாயிலுக்கே வந்து சேர்ந்துவிடலாம். அப்படிச் சுற்றினால் கோயிலின் கன்னி மூலையில்தான் ஆதிப்புளிய மரம். அதன் அடியில் உத்தண்ட வேலாயுதமும் ஆதிமூல நிலையமும் இருக்கும். அங்கு நம் வணக்கத்தைச் செலுத்திவிட்டு அதற்கு மேற்புறத்திலுள்ள பூஞ்சுனையையும் பார்த்துவிட்டு, கோயிலைச் சுற்றிக் கொண்டு திரும்பவும் கோயில் வாயிலுக்கே வந்து சேரலாம். பிரகாரம் முழுவதும் நல்ல சிமெண்ட் தளம் போட்டு வைத்திருக்கிறார்கள். இனி கோயிலுள் நுழையலாம். இங்குள்ள கோயில் அமைப்பு திருச்செந்தூர் செந்திலாண்டவன் சந்நிதியைப் போலத்தான். திருமலை முருகன் கிழக்கு நோக்கியும் சண்முகன் தெற்கு நோக்கியும் நிற்கிறார்கள். ஆதலால் முதலில் நாம் கோயிலுள் சண்முக விலாசத்தின் வழியாகவே நுழைவோம். அங்குதான் வசந்த மண்டபம் பெரிய அளவில் இருக்கிறது. அங்கு ஒரு துணின் உச்சியில் குழந்தை முருகனை அன்னை பார்வதி தன் மடியில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிலை இருக்கும். அதற்கு எதிர்ப்பக்கத்தில் உயரமான இடத்திலே சிவகாமி ஆத்தாளின் சிலையும் வைத்திருக்கிறார்கள். அவளுக்கு அருள் புரியவே குழந்தை முருகன் அவசரமாக அன்னை மடியிலிருந்து இறங்க முயல்கின்றானோ என்னவோ. இருவரையும் வணங்கிவிட்டே உள்ளே சென்றால் உள் பிரகாரத்திற்கு வருவோம். அதையும் கடந்து உள்ளே சென்றால் ஒரே சமயத்தில் திருமலை முருகனையும். வள்ளி தெய்வயானை சகிதம் மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கும் சண்முகனையும் தரிசிக்கலாம்.


திருமலை முருகன் கம்பீரமான வடிவினன். சுமார் நான்கு அடி உயரத்தில் நல்ல சிலாவிக்கிரகமாக நிற்கிறான். அவன் தனது வலது தோளில் ஒரு செப்புவேலையும் ஏந்தியிருக்கிறான். கருணை ததும்பும் திருமுகம். அதனால் தானே அவன் சிறந்த வரப்பிரசாதியுமாக இருக்கிறான். சண்முகன் மிகச் சிறிய வடிவினன். அவனுக்கு அவன் துணைவியருக்கும் ஆடைகள் உடுத்து அவர்கள் உருவம் முழுவதையுமே மறைத்து வைத்திருப்பார்கள் அர்க்சகர்கள். அவன் மஞ்சம் மிக்க சோபையோடு விளங்கும். முருகன் சந்நிதியில் விழுந்து வணங்கி எழுந்தால் அர்ச்சகர் விபூதிப்பிரசாதத்தை இலையில் வைத்தே கொடுப்பர். இப்படி இலை விபூதி கொடுப்பதற்கு என்றே சொக்கம் பட்டி ஜமீன்தாராயிருந்த ஒருவர் 12 கோட்டை நன்செய்