பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

பாஸ்கரத் தொண்டைமான்


நிலங்களை மானியமாக விட்டிருக்கிறாராம். முருகனுக்குத் தினசரி எட்டுக்கால பூசை நடக்கிறது. ஒவ்வொரு பூசைக்கும் தனித்தனி நைவேத்தியங்கள் உண்டு. பணம் கொடுத்து நைவேத்தியங்களை அருந்தி நம் வயிற்றுப் பசியையும் தீர்த்துக் கொள்ளலாம். ஆத்மப்பசிதான் முருகனை வணங்கி எழுந்ததுமே தீர்ந்திருக்குமே.

முருகனையும் சண்முகனையும் வணங்கிவிட்டு, உட்பிரகாரத்தைச் சுற்றினால் ஈசான்யமூலையில் ஒரு கம்பீரமான வடிவம் நிற்கும். எட்ட இருந்து பார்த்தால் அதுவும் முருகனே என்றே நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த வடிவம் சிவனது பைரவமூர்த்தம் என்பார்கள் அதற்குரிய கணங்கள் அங்கிருக்க மாட்டா. அந்த பைரவன் மிக்க வரசித்தி உடையவராம். அதனால் அவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுகிறார்கள் பக்தர்கள். மேலும் அவரே அக்கோயிலின் பிரதான நிர்வாகி இரவில் வாயில்களை எல்லாம் பூட்டி சாவியை அவர் முன்பு கொண்டுபோய் வைத்து விடுவார்கள். அதன் பின் கோயிலையும் அங்குள்ள சொத்துக்களையும் கண்காணிப்பது அவருடைய பொறுப்பு. கோயிலைவிட்டு வெளியே வரும் போது ஒரு சிறு மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கும் திருமலைக்குமரனின் செப்புப் படிமத்தையும் பார்த்துவிட வேண்டும். ஒன்றரை அடி உயரமே உள்ள வடிவம் தான் என்றாலும், மிக்க அழகான வடிவம். இங்கு கோயிலுக்கு ராஜ கோபுரம் கிடையாது. முருகனும் பால முருகன் ஆனதால் வள்ளி தெய்வானை சந்நிதிகளும் கிடையாது.

திருமலை முருகன் நல்ல இலக்கிய ரஸிகன் என்று தெரிகிறது. அவனைத் தனது திருப்புகழ் பாக்களால் அருணகிரியார் பாடி இருக்கிறார்.

எனது உயிர்க்கு உயிர் ஒத்த நவநீதா
சிவமுகப் பரமற்கு இளையோனே
தினைவனத் தெரிவைக்கு உரியோனே
திருமலைக் குமரப் பெருமானே

என்பது பாடல். எனக்கு அருணகிரியார் பேரில் பொல்லாத கோபம் வருகிறது. அவன் வள்ளியைக் கண்ணெடுத்தும் பாராத இள வயதினன் என்றாலும் அவனுக்க அவளே உரியவள் என்று கோடி