ஆறுமுகமான பொருள்
83
காட்டுகிறார். சரி, இது இருக்கட்டும். மங்கைப் பருவத்தின் அழகெல்லாம் திரண்டிருக்கும் வள்ளியை தெரிவை என்று சொல்வானேன்? இன்னும் திருமலை முருகன் பிள்ளைத் தமிழுக்கு உரியவனாகவும் இருந்திருக்கிறான். குறவஞ்சி நொண்டி நாடகம், பள்ளு, காதல் பிரபந்தங்களும் இந்த முருகனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்தே பாடப்பட்டிருக்கின்றன.
ஐவர் சகாயன் மருகன்
திருமலை ஆறுமுகத்
தெய்வ சகாய முண்டே
வருமோ கொடுந் தீவினையே
என்று பெரியவன் கவிராயர் பள்ளில் பாடியிருக்கிறார். அத்தகைய உறுதியான உள்ளத்தை அந்த முருகன் அளிக்கக் கூடியவன் என்பதற்காகவே ஒரு நடை அவன் சந்நிதிக்குச் செல்லலாம்.
ஒன்று சொல்லமறந்து விட்டேனே! எங்கள் குடும்பத்தின் குலகுருவாய் விளங்கியவர் திருப்புகழ் சாமி என்னும் வண்ணச்சரபம் முருகதாச சுவாமிகள். அவர் திருமலை முருகனிடத்து ஆராத காதல் உடையவர். கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன் திருமலையில் ஏறியிருக்கிறார். திருமலை முருகனை வணங்கி இருக்கிறார். மலைமீதிருந்தே கீழே உடலை உருட்டியிருக்கிறார். குமரனும் அந்து உடலுக்கு யாதொரு தீங்கும் நேரிடாவண்ணம் காத்திருக்கிறார். இதை அவரே பாடுகிறார்.
வட திசையில் தலை வைத்து
மறலித்திசைக்கால் நீட்டி
உடலை அந்தத் திரு மலையின்
உச்சியில் நின்று உருட்டி விட்டேன்
விடலை இடும் தேங்காய் போல்
வேறு பட்டுச் சிதறாமல்
மட மடெனக் கொண்டு ஆங்கோர்
மண் தரையில் விட்டதுவே
இந்தப் பாடலைப் படித்துக் கொண்டே திருமலையினின்றும் இறங்கினேன் நான். எனக்கு என் உடலை உருட்ட தைரியமில்லை.