பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆறுமுகமான பொருள்
85
 


12
கந்தர் சஷ்டி கவசம்

எல்லாம் வல்ல இறைவனிடம் பக்தி செலுத்துவதற்கு எத்தனையோ வழிகளை நமக்குப் பெரியவர்கள் காட்டி இருக்கிறார்கள். இறைவனை நினைத்தல், அவனைப் பற்றிக் கேட்டல், அவன் நாமத்தை சொல்லல் என்னும் மூன்றும் நாம் செய்ய்க் கூடியவை. இவற்றையே ஸ்மரணம், சிரவணம், கீர்த்தனம் என்று வட மொழிவல்லார் கூறுகின்றார். இம்மூன்று வகையிலும் மிக எளிதாக நாம் செய்யக்கூடியது. இறைவன் நாமத்தைச் சொல்லலும் அவன் புகழ்பாடுதாலும் தான்.

தமிழ் நாட்டின் தனிப் பெருங்கடவுள் முருகன். என்றும் இளையனாகவும், அழகனாகவும், ஏன், இறைவனாகவுமே விளங்குகின்றவன் அவன். அதனால் அவனைப் பற்றிப் பாராயணம் பண்ணுவதற்குப் பல நூல்கள் உண்டு. அவைகளில் மூன்று சிறப்பாகக் கருதப்படுகின்றன. அவை திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, கந்தர் சஷ்டி கவசம் என்பவையே. இவற்றில் திருமுருகாற்றுப்படை இலக்கிய நயம் உடையது. ஆனால் எளிதில் பொருள் விளங்காதது. கந்தர் கலி வெண்பா ஒரு குட்டிக் கந்த புராணமேயாகும். சித்தாந்தக் கருத்துக்கள் சொல்ல சித்தாந்த சாஸ்திரம் கற்ற பெரியவர் ஒருவரையே அணுக வேண்டியிருக்கும். ஆனால் எவரும் நன்றாகப் பொருள் தெரிந்து பாராயணம் பண்ணுவதற்கு உரிய நூல் தான் கந்தர் சஷ்டி கவசம்.

இறைவனை அணுகும்போது, அவனிடம் பிரார்த்திக்கிற போது உலகெல்லாம் உய்ய வேண்டும் என்று பிரார்த்திப்பவர்கள் பெரியோர்கள். ஆனால் எல்லோருமே பெரியவர்களாக இருந்தவிட முடியாது அல்லவா?