மயங்குகிறோம். சிக்கல் சிங்காரவேலன், எட்டுக் குடி வேலன், எண்கண் வேலன் மூவரையும் ஒரே சிற்பிதான் உருவாக்கினான். முதலில் சிக்கலில் இளமையிலும், எட்டுக் குடியிலும் முதுமையிலும், எண்கண்ணில் கண்பார்வை இழந்த பின்பும் சிலைகளை உருவாக்கினானாம். கண்பார்வையிழந்த பின் வடித்த சிலையின் அழகை வருணிக்க முடியாதென்றால் பார்வையிருக்கும்போது செய்த சிலைகளின் அழகை என்னென்று வருணிப்பது என்கிறார்கள் ஆசிரியப் பெருமகன்.
திருமுருகாற்றுப் படையின் செய்தி முழுவதையும் இலக்கிய நயத்துடன் எடுத்துரைக்கிறார்கள். சிவபெருமானைப் பார்த்து நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்ற அஞ்சா நெஞ்சன் நக்கீரன் நெஞ்சத்தில் சிவபெருமான் அதிகம் இடம்பெறவில்லை. சிவகுமாரனே அதிகம் இடம் பெறுகின்றான் என அருமையாகக் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.
“அருணகிரி, அன்று பிரமன் கீறிச் கீறிச் என்று கையால் எழுதிய எழுத்தைக் குமரன், செந்தூர் வேலவன் தன் காலாலேயே அழித்து விடுகிறான்" என்று ஆசிரியப் பெருமகனார் நகைச்சுவையோடு சொன்னாலும், செந்தூரான் நம் விதியை மாற்றுபவன் என்ற உண்மையை நினைவுறுத்துகிறார்கள்.
குமரகுருபரர் பாடியருளிய முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் தேனினும் இனிய இலக்கியம். இது ஆசிரியப் பெருமகனார் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதில் வியப்பில்லை. குழந்தை முருகன் அம்மை மடியில் தவழ்ந்து அப்பன் திருமார்பில் குரவையாடிப் பின் கங்கையில் குதித்துக் கண் சிவக்க விளையாட்டயர்ந்து பலகுறும்புகள் செய்ததை இவர்கள் நம் கண்முன்னே ஓவியமாகக் காட்டுகிறார்கள்.
திருமலை முருகனுக்குத் தனி ஒருவராக நின்று பெரிய கோயிலைக் கட்டியதுடன், முருகனுக்குச் சேர வேண்டிய சொத்துக்களை அபகரித்தவன் மீது வழக்குத் தொடுத்து வழக்கைப் பல்லாண்டுகள் நடத்தி வென்று அச்சொத்துக்களைக் கோயிலுக்கு உடைமையாக்கி நிருவாகமும் பூசைகளும், விழாக்களும் எக்காலத்தும் செம்மையாக நடைபெற ஏற்பாடு செய்த பெண்துறவி மறவர் குல மாணிக்கம் சிவகாமி ஆத்தாள் தொண்டினையும் பெருமையினையும் இப்பெருந்தகை மறவாது கூறியுள்ளார்கள்.