பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவர்களின் குலகுருவான தண்டபாணி சுவாமிகள் திருமலையின் உச்சியிலிருந்து உருண்டார்கள். ஒரு துன்பமும் இல்லாமல் முருகன் காத்தருளினான். அதுபோல் இவர்கள் மூக்குக் கண்ணாடி பெருங்காற்றில் அடித்துச் சென்றுவிட அதைத் தேடி எடுத்துவரப் பணியாளை ஏவினார்களாம். என்ன அதிசயம்! கண்ணாடி சிறிதும் உடையாமல் கிடைத்துவிட்டதாம். 'கந்தரநுபூதி' பெற்ற இப்பெருமகனார்க்குக் கண்ணாடி என்ன? ஞானக் கண்னையே அவன் வழங்கியருளியுள்ளான்.

மதிப்பிற்குரிய அன்புச் சகோதரியார் திருமதி. இராஜேசுவரி நடராசன் அவர்கள் ஒப்பற்ற தம் தந்தையார் வகுத்த வழியே செம்மையான வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். ஆழ்ந்த இறையுணர்வும், நிறைந்த கல்வியறிவும், சொல்வன்மையும், சமய, இலக்கியத் தொண்டுணர்வும் மிக்கவர்கள் - தம் பெருமைக்குரிய தந்தையார் விட்டுச் சென்ற ஞானச் செல்வத்தை எல்லோரும் பெற்று இன்புற வேண்டும் என்னும் நன்னோக்கத்துடன் நூலாக வெளியிட்டு வருகிறார்கள். "ஆறுமுகமான பொருள்" அந்த வரிசையில் ஒன்று. ஆறுமுகனிடம் அடியார்களை ஆற்றுப்படுத்தும் அற்புத நூல். தலைமுறை தலைமுறையாக வைத்துப் போற்ற வேண்டிய ஞானச் செல்வம். இதனை வெளியிட முன்வந்த சகோதரியார் திருமதி. இராஜேசுவரி நடராசன் அவர்களுக்கு முருகனடியார்கள் சார்பிலும் அடியேன் சார்பிலும் வாழ்த்தையும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன்
ப. இராமன்