உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

3



“தமிழ் நாட்டில் தெய்வ வடிவில் உருவாகியிருக்கும் வடிவங்களுக்கு எல்லாம் அடிப்படையில் ஒவ்வொரு தத்துவ உண்மையிருக்கும். எல்லாம் வல்ல இறைவனை பகவான் என்று அழைக்கிறோம். பகவான் என்னும் சொல்லுக்கு ஆறு நல்ல பொருள் அமைந்தவன் என்பதே பொருள். ஞானம், வைராக்கியம், வீரியம், ஐசுவரியம், கீர்த்தி, அறம் ஆகிய ஆறும் எவனிடத்து ஒன்று சேர்ந்திருக்கின்றனவோ அவனே பகவான். இந்த ஆறினுள் ஏதேனும் ஒன்று சிறப்பாக ஒருவனுக்கு அமைந்துவிடுமானால் அவனே பெருமகன் ஆகிவிடுகிறான். ஆறும் ஒன்று சேர்ந்து ஒருவனிடம் குடியிருக்குமானால் அவன் கடவுளே ஆகிவிடுகிறான்”. இப்படி எண்ணியிருக்கிறான் தமிழன்: தமிழ்நாட்டுக் கலைஞன். அப்படி தமிழன் கற்பனை பண்ணிய தமிழ்க் கடவுளே முருகன்.

"இவ்வளவுதானா? இல்லை. இன்னும் பேரொளி படைத்தவன், அடியார்க்கு எளியவன், வேள்விக் காவலன், ஞானபண்டிதன், வீரப்பெருமகன், இன்பத் தலைவன் எல்லாம் அவனே என்று காட்டவே அவனுக்கு ஆறு திருமுகங்களைக் கற்பனை பண்ணியிருக்கிறான்” என்றெல்லாம் அறுமாமுகவனுக்கு விளக்கம் கூறினேன்.

சந்தேகப் பேர்வழியான நண்பருக்கோ, இதனால் எல்லாம் சந்தேகம் தீர்ந்த பாடாக இல்லை. இவரை மடக்குவதற்கு, அவர் பெரிதும் போற்றும் பௌதிக விளக்கம் கூறத்தான் வேண்டும் என்று எண்ணினேன், சொன்னேன்;

“இந்தப் பௌதிக உலகம் பரம்பொருளின் ஸ்தூல தோற்றமே. பரம்பொருளைக் காரண வஸ்து என்றால் இந்த உலகைக் காரியவஸ்து என்று வைத்துக் கொள்ளலாம் தானே. இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது. இந்தப் பூதப் பொருள்களைப் பகுத்துக் கொண்டே போனால் பகுக்க முடியாத ஒரு நிலையில் அதனை அணு என்கிறோம். அந்த அணு. இயங்கும் போது புரோட்டான், எலக்ட்ரான் என்று இரண்டு வடிவங்கள் எடுக்கின்றன. புரோட்டான் அசையாது நிலைத்து நிற்கிறது. அதைச் சுற்றி சுற்றி எலக்ட்ரான்கள் சுழல்கின்றன. அத்தகைய பூதப்பொருள்களில் கரி (carbon) என்பது ஒன்று. அதில் புரோட்டான் ஒன்றும் எலக்ட்ரான் ஆறும் இருக்கின்றன என்கின்றனர்