4
பாஸ்கரத் தொண்டைமான்
விஞ்ஞானிகள். இந்த எலக்ட்ரான் எண்ணிக்கையில் ஆறுக்கு அதிமாகப் போய்விட்டாலும், குறைவாய்ப் போய்விட்டாலும் உயிர்த் தத்துவத்தை ஊட்டும் சக்தியை அது இழந்துவிடுகிறது. கரியில் ஆறு எலக்ட்ரான் சேர்ந்திருக்கிறது.
உயிர்த் தத்துவத்தை வளர்க்கும் நடைமுறையை விளக்கவே ஆறு கார்த்திகைப் பெண்களால் இறைவனாம் முருகன் வளர்க்கப்பட்டான் என்று உருவகப்படுத்தியிருக்கின்றனர். ஆறு பெண்கள் வளர்த்த ஆறு பிள்ளைகளையும் இணைத்தே ஓர் அறுமாமுகனை உருவாக்குகிறாள் உலகெலம் புகழ்கின்ற அன்னை உமை.
“என்ன அன்பரே விளங்குகிறதா உமக்கு இப்போது, ஆறுமுகமான பொருள் ஏன் எப்படி, அறுமாமுகனாக உருவாகியிருக்கிறது என்று” என்று ஒரு போடு போட்டேன். நண்பர் வாயடைத்துப் போய்விட்டார்.
இப்படி ஆறுமுகமான பொருளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுதுதான் அருணகிரியார் பாடிய பாடல் ஞாபகத்துக்கு வந்தது. ஆம் எல்லோருக்கும் தெரிந்த அந்த திருப்புகழ்தான்.
ஏறுமயிலேறி விளை
யாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி
பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை
தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி
நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை
வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர
வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள்
நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம்
அமர்ந்த பெருமாளே.