பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
பாஸ்கரத் தொண்டைமான்
 


நலம்புரி கொள்கை
புலம் பிரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை
ஆயின் பலவுடன்
நன்னர் நெஞ்சகத்து
இன்நசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ
முன்னிய வினையே

என்றுதானே ஆற்றுப்படுத்துகிறார். இந்த முறையிலே நானும் இந்த கந்தர்சஷ்டி விழாவிலே உங்களை எல்லாம் ஆறுபடை வீடுகளுக்குமே ஆற்றுப்படுத்த விழைகிறேன். கால வசதியும் பொருள் வசதியும் உடையவர்கள் தாமே, இந்த விழா நடக்கும் ஆறு நாட்களுக்குள், ஆறுபடை வீடுகளுக்கும் சென்று ஒவ்வொரு கோயிலிலும் வணங்கித் திரும்புதல் கூடும். நானோ ஒரு சிரமும் இல்லாமல், செலவுக்கும் இடம் வைக்காமல் ஆறுபடை வீடுகளுக்கும் அநாயாசமாகவே அழைத்துச் சென்று திரும்பியும் கொண்டு வந்து சேர்த்து விடுவேன். இந்த மானசீக யாத்திரையைத் துவங்குவோமா?

ஆறுபடை வீடுகளிலும், படைவீடு என்னும் பொருளுக்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பது திருச்செந்தூர்தான். அதைத்தான் திருச்சீர்அலைவாய் என்று நக்கீரர் அழைத்திருக்கிறார். அலைவாய் என்ற பெயரிலேயே அது ஒரு கடற்கரைப் பட்டினம் என்று தெரியும். திருநெல்வேலி மாவட்டத்திலே கீழ்க்கோடியிலே மன்னார் குடாக் கடற்கரையிலே முருகன் சூரபதுமனை வதைத்து வெற்றி கொண்டிருக்கிறான். சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேலைத் தாங்கியவனாகவே நிற்கிறான். அங்கே கருவறையில் நிற்கும் அவனையும் முந்திக் கொண்டே சண்முகன் நம் வரவை எதிர்நோக்கி, நிற்பவன் போல, நாம் கோயிலில் நுழைந்ததும் காட்சி தருகிறான். அவனது ஆறு முகங்களும் எப்படிப் பொலிகின்றன, எவ்வாறெல்லாம் அருள்புரிகின்றன என்பதை நக்கீரர் வாயாலேயே கேட்கலாம்.


மாயிருள் ஞாலம்
மறுஇன்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று