பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

13



அடுத்த படைவீடு என்று கருதப்படுவது பழமுதிர் சோலை. நான் முன்னமேயே சொல்லியிருக்கிறேன். இது எந்த இடம் என்று தீர்மானிப்பதில் பல கஷ்டங்கள் உண்டு என்று. என்றாலும் பலரும் ஒப்புக் கொள்ளும் பழமுதிர் சோலைதான், மதுரைக்கு வடக்கு பத்து மைல் துரத்தில் உள்ள அழகர் கோயில், அந்த அழகர் கோயிலுக்குச் சென்றால் அங்குள்ள பெரிய கோயிலில் இருப்பவன் சுந்தரராஜன் என்னும் பெருமான் அல்லவோ என்று தானே கேட்கிறீர்கள். அந்த மாமன் பின்னர் உருவானவன்தான் என்பர் பெரியோர். அவனையும் வணங்கி அங்குள்ள மலைமீது ஏறி ஒன்றரை மைல் நடந்து சென்றால் ஒரு குளிர் பூஞ்சோலையில் வந்து சேருவோம். அங்கு தான் நூபுர கங்கை என்னும் சிலம்பாறு ஓடுகிறது. அந்தப் பழமுதிர் சோலை மலை கிழவோன் நல்ல இடத்தைத் தான் தேடி எடுத்திருக்கிறான். இங்கு அவன் கோயில் கொண்டிருந்த இடத்தில் ஒரு மண்டபமும் அதில் வேல் ஒன்றும் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. சமீப காலத்தில் அன்பர் பலர் சேர்ந்து ஒரு சிறுகோயிலையே கட்டி வைத்திருக்கின்றனர். இந்தக் கோயில் காரணமாக இப்பழமுதிர் சோலைக் கிழவன் கோர்ட்டு வரை வரவேண்டியவனாக இருந்திருக்கிறான். அவன் கோர்ட் வரை வந்தாலும் நாம் அவனைத் தேடிச் சென்று கண்டு வணங்கித் திரும்பலாம். நமது கந்தர் ஷஷ்டி விழா யாத்திரையில் பழமுதிர் சோலையம் பகவனை வாழ்த்திப் போற்றிய மன அமைதியுடன் மேல் நடக்கலாம்.

ஒரு சிறப்பு என்னவென்றால் ஆறுபடை வீடுகளில் நான்கு படைவீடுகள் பாண்டி நாட்டிலேயே அமைந்திருக்கின்றன. அதில் மூன்றைத் தான் பார்த்திருக்கிறோம். அடுத்தது தான் திரு ஆவினன்குடி, ஆவினன் குடி என்றால் அது எங்கே இருக்கிறது என்றுதான் கேட்கத் தோன்றும். ஆனால் பழநி என்னும் தலமே அது என்றால் அங்குதான் பல தடவை சென்றிருக்கிறோமே. பழநி ஆண்டவனையும் வணங்கியிருக்கிறோமே என்றுதான் பலரும் சொல்வார்கள். ஆம், நாம் அந்த பழநிக்கே செல்லலாம். பழநி மலைக் கோயிலும் அங்குள்ள ஆண்டவன் சந்நிதியும் பிற்காலத்தில்தான் எழுந்திருக்க வேண்டும். அங்குள்ள பழமையான கோயில், மலை அடிவாரத்தில் உள்ள திரு ஆவினன் குடிக் கோயில் என்பர். அந்த ஆவினன் குடி உறை அமலனைத் தானே நக்கீரர் பாடியிருக்கிறார்.