உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

17



உளத்திண்மையைப் பற்றியோ ஒன்றும் கூறவில்லை. அவர் கூறியதெல்லாம் இந்தப் பாடலில் எத்தனை ‘ஓம்’ வருகிறது என்று பாருங்கள். மொத்தம் ஒன்பது ஓம் வருகிறது. 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம், இந்தப் பாடலில் முழுவதும் ஒலிப்பதன் காரணமாகத்தான் இந்தப் பாடலில் ஒரு மந்திர சக்தி இருக்கிறது. அதனால் இப்பாடலைப் பாடப்பாட மந்திர உச்சாடனத்தால் ஏற்படும் பலன் நமக்குக் கிடைக்கிறது என்று பேசினார். இதைக் கேட்டு உள்ளூர நகைத்துக் கொண்டே வீடு திரும்பினேன் அன்று. நானே பாடல்களில் சொல்லும் பொருளும், பண்ணும் இசையும் எப்படி இணைந்திருக்கின்றன என்பதை உணர்ந்து உணர்ந்து அநுபவிக்கும் பழக்கம் உடையவன். ஆதலால் பாடலில் எத்தனை 'ஓம்' என்று கணக்குப் போடுவதெல்லாம் சிறுபிள்ளைத் தனம் என்று கருதுகின்றவன்.

ஆனால் பிரணவம், பஞ்சாக்ஷரம் முதலிய மந்திரங்களின் பெருமையைப் பற்றி நமது சமய குரவர்கள் எல்லாம் பாடியிருக்கிறார்களே, அது எல்லாம் உண்மையில்லையா என்றும் எண்ணிற்று என் மனது. இறைவனே பிரணவ சொரூபமாக இருக்கிறான் என்கிறார்களே.

என் உபாசனா மூர்த்தியாகிய விநாயகனே பிரணவ சொரூபிதானே என்றெல்லாம் என்மனம் அலைபாயும்


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

என்று பஞ்சாக்ஷரத்தின் பெருமையைச் சம்பந்தர் பாடி இருக்கிறார். அப்பரோ,


சொல்துணை வேதியன் சோதிவானவன்
பொன்துணை திருந்தடிப் பொருந்தக் கைதொழ
கல்த்தூணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்
நல்த்துணை யாவது நமச்சிவாயவே

என்று ஐந்தெழுத்து மந்திரத்தை மறவாமல் சொல்லிச்சொல்லி அதில் இன்பம் கண்டிருக்கிறாரே. மணிவாசகரோ தன்னுடைய