20
பாஸ்கரத் தொண்டைமான்
சரவணபவன். சரவணப் பொய்கை என்றாலே நாணல் புற்கள் செறிந்த பொய்கை என்று பொருள் கூறுவாரும் உண்டு. சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரிப்பதால் சர்வ மங்களமும் உண்டாகும் என்பதும் விளக்கமுறும்.
இன்னும் சரவணன் என்றாலே நாராயணன் என்றே பொருள் என்பதால் எல்லா மந்திரங்களுமே ஒரு பொருளையே குறிக்கும் என்பதும் விளக்கமுறுகின்றது. அஞ்செழுத்து மந்திரமாயினும், ஆறெழுத்து மந்திரமாயினும் இல்லை எட்டெழுத்து மந்திரமாயினும் எல்லாம் குறிக்கும் பரம்பொருள் ஒன்றே தான் என்பது உறுதியாகிறதல்லவா? ஏரகத்து உறையும் முருகனிடத்து நம்மை ஆற்றப்படுத்தும் நக்கீரர்,
ஆறுஎழுத்து அடங்கிய
அருமறைக் கேள்வி
நா இயல் மருங்கில்
நவிலப் பாட
வேண்டும் என்கிறார்; அருணகிரியாரோ
ஆங்காரமும் அடங்கார் ஒடுங்
கார் பரமானந் தத்தே
தேங்கார் நினைப்பும் மறப்பும்
அற தினைப் போதளவும்
ஓங்காரத்து உள்ளொளிக் குள்ளே
முருகன் உருவம் கண்டு
தூங்கார், தொழும்பு செய்யார்
என்செய்வார் யமதூதருக்கே?
என்று மக்களைப் பார்த்து இரங்குகின்றார். ஆகவே ஓங்காரத்துள் காண்பவனும் முருகனே. நாராயணா என்னும் போதும் தோன்றுபவன் முருகனே என்றும், சரவணபவ என்னும்போதும் தோன்றுபவன் அவனாக இருத்தல் வியப்பல்லவே.
அந்த ஆறெழுத்து மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க உடம்பில் ஒரு சக்தி, உள்ளத்தில் ஒரு தெம்பு உண்டாகும் அழைத்த போதெல்லாம் வருவதற்கு காத்து நிற்பவன் ஆயிற்றே.