உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

பாஸ்கரத் தொண்டைமான்



பக்தன். அவ்வளவுதான் அப்படியே அதிசயித்து நின்று விடுகிறான். இப்படி நிற்பவன் ஏதோ ஆடையும் அணிகளும் அணியாமல் பஞ்சைப் பரதேசியாகவா நிற்கிறான்? ஒரே தங்கமயமான பொன்னாடை புனைந்து, ரத்னகசிதமான அணிகளையும் அணிந்து நிற்கிறான். தலையில் அணிந்திருக்கும் கிரீடம் ஒன்றே அரை லக்ஷம் ரூபாய் பெறும். தோளில் அணிந்திருக்கும் வாகுவலயமோ ஒரே ரத்னமயம், ஏந்தியிருக்கும் வைரவேலோ லேசாக இரண்டு லக்ஷம் பெறலாம். ஆளுக்கே கொடுக்கலாம் ஜாமீன் ஐந்து லக்ஷத்துக்கு. அத்தனை செளந்தர்யத்துடன், சொத்து சுதந்திரத்துடன் கம்பீரமாக நிற்கிறான் ஆறுமுகன். இவ்வளவுதானா? இந்த அழகன் பக்கத்தில் ஒன்றுக்கு இரண்டு மனைவியர், அழகனுக்கு ஏற்ற அழகிகளாக அன்னம் போலவும் மயில் போலவும் காட்சி கொடுக்கிறார்கள். வஞ்சனையில்லாமல் மனைவியர் இருவருக்கும் அழகான ஆடைகளையும், அளவற்ற ஆபரணாதிகளையும் அணிவித்து அழகு செய்திருக்கிறான். இதையெல்லாம் பார்த்த பக்தனுக்கோ ஒரே கோபம், இன்னுமா இவன் சின்னப்பிள்ளை என் குறைகளை எல்லாம் நான் முறையிடாமலே அறிந்து கொள்ளும் வயதில்லையா, இல்லை ஆற்றல்தான் இல்லையா? ஏன் இவன் நமது துயரைத் துடைத்திருக்கக் கூடாது' என்றெல்லாம் குமுறுகிறான். குமுறல் எல்லாம் - கவிஞன் ஆனதினாலே - ஒரு பாட்டாகவே வெளிப்படுகிறது. பக்தன் அப்போது பாடிய பாட்டு இதுதான்.

முன்னம் நின் அன்னை அமுதூட்டி,
மையிட்டு, முத்தமிட்டுக்
கன்னமும் கிள்ளிய நாளல்லவே,
என்னைக் காத்தளிக்க
அன்னமும் மஞ்ஞையும் போல இரு
பெண் கொண்ட ஆண்பிள்ளை நீ,
இன்னமும் சின்னவன் தானோ
செந்தூரில் இருப்பவனே

என்று பாடுகிறான். 'அன்னமும், மஞ்ஞையும் போல் இரு பெண் கொண்ட ஆண் பிள்ளை நீ' என்று ஆங்காரத்துடனேயே கேட்கிறான் ஆறுமுகனை. இன்னமும் சின்னவன்தானோ? என்று முடிக்கும் போது