26
பாஸ்கரத் தொண்டைமான்
கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆம், எல்லாம் வல்ல இறைவன் என்றைக்கும் இளையவனாக இருக்கிறான் நமக்கெல்லாம்.
இன்னும் ஒருபடி மேலே. இறைவனை மட்டும் குழந்தையாக ஆக்கிக் கொண்டால் போதாது; பக்தனும் தன்னைக் குழந்தையாக ஆக்கிக் கொள்ள வேணும். ஐந்து வயதுப் பாலகனாக இருக்கிற போதுதானே ஆற்றங்கரைப் பிள்ளையாருடன் அளவளாவி விளையாட முடிகிறது. அவருடைய கொம்பைப் பிடித்து அசைத்து, அவருடைய காதைப் பிடித்துத் திருகி, பிள்ளைத் தோழனாக உறவு கொண்டாட முடிகிறது. வயது ஏற ஏற, அறிவு வளர வளர, கடவுள், தெய்வம், பாவம், புண்ணியம் என்றெல்லாம் அறிய, அறிய, நாம் இறைவனை நெருங்க அஞ்சுகிறோம். எட்டி நின்று கும்பிடு போட்டு விட்டு திரும்பிவிட விரைகிறோம். அப்போது நமக்கும் இறைவனுக்கும். இடையே உள்ள தூரமும் அகன்று கொண்டே போகிறது. இறைவன் குழந்தையாகவும் நாம் மனிதனாகவும் இருந்தால் பயனில்லாது போய்விடுகிறது. ஆதலால் நாமும்,பக்தி செலுத்த விரும்பும் நாமும், குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். இத்தகைய எண்ணத்தைத் தான் நம் உள்ளத்தில் உருவாக்கி விடுகிறான் இளைஞனான முருகன், அழகனான குமரன்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
அவதாரம்
தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றி, அவன்றன் அவதார தத்துவத்தைப் பற்றி எத்தனை எத்தனையோ கதைகள். புராதனமான வால்மீகி இராமாயணம், இடையிட்ட சங்கச் செய்யுள் பரிபாடல், பிற்காலத்திய கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, எல்லாம் கிட்டத்தட்ட ஒரே கதையையே கூறுகின்றன. இறைவனது நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த பொறிகளை, அக்கினி ஏந்தி வாயுவிடம் கொடுக்க வாயு கங்கையில் விட கங்கை சரவணப் பொய்கையில் விட்டு விடுகிறான். அங்கே ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருப்பெற அந்தக் குழந்தைகளைக் கார்த்திகை மாதர் அறுவர்