பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.முகவுரை


“ஆறுமுகமான பொருள்” என்ற இந்த நூல் என் தந்தையார், தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான் அவர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், வெவ்வேறு கால கட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. உதிரிப்பூக்களைப் போலத் தனித்தனியாக, கந்த சஷ்டி விழாக்களின் போது வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரைகளை எல்லாம் ஒன்றாகத் தொகுத்து ஒரே நூலாக வெளியிட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய ஆசை. இறைவன் கண்களினின்று புறப்பட்ட ஆறு பொறிகளிலிருநது உருவான ஆறு குழந்தைகளை, அன்னை உமையவள் சேர்த்தனைக்க அறுமாமுகவன் உருவான கதை நமக்குத் தெரியும். அந்த உமையவளின் கருணையினாலே இந்தக் கட்டுரைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, "ஆறுமுகமான பொருள்" உருவாகியிருக்கிறது. ஆசிரியர் அந்த வெளியீடுகளுக்கு எழுதிய முன்னுரைகளையே இந்த நூலுக்கும் முன்னுரையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த முன்னுரையே இந்த நூலுக்குச் சரியான விளக்கமாக அல்மைந்து விடும் என்றும் நம்புகிறேன்.

ஆசிரியர் தொண்டைமான் அவர்கள் வேங்கடம் முதல் குமரி வரை என்ற தலைப்பில் தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றி எழுதிய நூலில், முருகன் கோயில் கொண்டிருக்கும் தலங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அவை முப்பதுக்கும் மேலிருக்கும். தமிழ்நாட்டில் விநாயகப் பெருமானுக்கு அடுத்தபடியாக முருகப் பெருமானுக்குத்தான் அதிகப்படியான கோயில்கள். அறுபத்துநான்கு என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள். அதற்கும் மேலேயே இருக்கும். முருகன், தமிழ் மக்கள் தொன்று தொட்டு வணங்கி வரும் தெய்வம். ஆகவே முருகனைப் பற்றிய தத்துவங்களையும், செய்திகளையும் எத்தனை முறை சொன்னாலும், எப்படி எப்படிச் சொன்னாலும் அது தேனும் தினை மாவும் போல இனிக்கத்தான் செய்யும். அந்த நம்பிக்கையில்தான் “ஆறுமுகமான பொருள்” வெளி வருகிறது.

இந்த நூலுக்கு சித்தாந்தச் செல்வர், பேராசிரியர் டாக்டர் பா.இராமன் அவர்கள் அருமையான அணிந்துரை வழங்கியிருக்கிறார். அவர் சிறந்த ஆன்மீகச் செல்வர். நல்ல முருக பக்தர். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளிடத்தும், அவருடைய நூல்களிடத்தும் எல்லையில்லாத ஈடுபாடு உடையவர்.