பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

35


முனைகிறான். தன் தந்தையின் கட்டளைப்படி அவனுடன் புறப்படுகிறார்கள் நவவீரர்களும் மற்றவர்களும் எண்ணிறந்த படைக்கலங்களை ஏந்திக் கொண்டு. அன்னையும் பாலகனுக்கு நல்லதொரு வேல் கொடுத்து ஆசி கூறி அனுப்புகிறாள். இந்தப் படையெடுப்பில் முதலில் இலக்கானவர்கள் நரகாசுரனும், கிரெளஞ்சமலையும் தான். இவர்களை வெற்றி காணுவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லைதான். அதன் பின் தன் சேனா வீரர்களுடன் மண்ணியாற்றின் கரையை அடைந்து, அங்கு சிவனை எழுந்தருளச் செய்து வணங்கி, தன் படைக்கலங்களை இன்னும் பெருக்கிக் கொள்கிறான். சேயன் அமைத்த சிற்றூர் சேய்ஞலூர் என்று பெயர் பெறுகிறது. அங்கிருந்து புறப்பட்ட முருகன் நவவீரர்களுடன் நேரே வந்து விடுகிறான் திருச்செந்துருக்கு. ஏன்? அதை அடுத்த வீரமகேந்திரத் தீவில் கட்டிய கோட்டையைத் தானே தன் கேந்திர ஸ்தானமாகக் கொண்டு சூரபதுமன் ஆட்சி புரிகிறான். நவவீரர்களில் சிறந்த வீரபாகுத் தேவரைத் தூதனுப்புகிறான், சிறையிலிருக்கும் தேவர்களை எல்லாம் விடுதலை செய்யச் சொல்லி, சூரபதுமன் இணங்கவில்லை. போருக்கே புறப்பட்டு விடுகிறான் தன் இளைஞரோடும் வீரரோடும். குமரனும் குமுறி எழுந்து தன்னை எதிர்த்த வீரர்களையும் சிங்கமுகாசுரனையும் கொன்று குவிக்கிறான். ஆறுநாள் நடக்கிறது போர். கடைசியில் போர் முருகனுக்கும் சூரபதுமனுக்குமே நேருக்கு நேர் ஏற்படுகிறது. அந்தப் போரிலே அன்னை தந்த வேலைப் பிரயோகித்து, சூரசம்ஹாரத்தையே முடிக்கிறான். வேற்படையால் இருகூறாகிறான் சூரபதுமன். மயிலாகி வந்த கூறைத் தன் வாகனமாகவும் சேவலாகி வந்த கூறை தன் கொடியாகவும் அமைத்துக் கொண்டு தன்னுடைய உண்மையான உருவத்தைக் காட்டுகிறான் கார்த்திகேயன். இப்படி, மணம் புரிந்த தெய்வயானையையும் வள்ளியையும் தனக்கு மிகவும் உகந்த இடமான திருச்சீரலைவாய்க்கே கூட்டி வந்து தன் பக்கத்தில் நிறுத்திக் கொள்கிறான் பக்தர்கள் எல்லாம் கண்டு களிக்க.

கொங்கை குறமங்கையின்
சந்த மணம் உண்டிடும்
கும்ப முனி கும்பிடும்
தம்பிரானே