உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

37


கூறியிருக்கிறான். வடமலையப்ப பிள்ளையும் குறித்த இடம் சென்று ஆறுமுகனைக் கடலின் அடித்தலத்திலிருந்து எடுத்து வந்து கோயிலில் நிறுத்தியிருக்கிறார். அன்று முதல் அங்கு கோயில் கொண்டிருப்பவனே அந்தப் பழைய ஆறுமுகன், ஆம், வடமலையப்பன் தேடி எடுத்த தேவதேவன், இதன் ஞாபகார்த்தமாக ஒரு நல்ல மண்டபத்தையும் கட்டி முடித்திருக்கிறார் அவர். அந்த மண்டபமே இன்றும் வடமலையப்பன் மண்டபம் என்று வழங்கப்படுகிறது.

இது ஏதோ கற்பனைக் கதை அல்ல. எம்.ரென்னல் என்னும் பிரெஞ்சு அறிஞர். 1785ல் ஜெர்மனியில் பெர்லின் நகரத்தில் இருந்து வெளியிடப்பட்ட சரித்திர இந்தியா என்ற புத்தகத்தில் இந்தத்தகவலை ஒரு டச்சு மாலுமியிடம் இருந்து தான் தெரிந்து கொண்டதாக குறித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி 1648ல் நிகழந்தது என்றும் உறுதியாக உரைத்திருக்கிறார். 1648ல் கடலுக்குள் சென்ற ஆண்டவன் 1653ல் தான் வடமலையப்ப பிள்ளையின் மூலமாக வெளிவந்திருக்கிறான். ஐந்து வருஷம் கடலுக்குள் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்து பக்தர்கள் உய்ய நல்ல தவம் பண்ணியிருக்க வேண்டும். தவத்தால் அடைந்த புதிய சக்தியோடு வெளிவந்து பக்தர்களுக்கு அருள் செய்ய திருவுளம் கொண்டிருக்க வேண்டும். பக்தர்களும் இந்தப் புனர் நிர்மாணத்தை 1953ம் வருஷத்தில் முன்னூறாவது ஆண்டு விழாவாகக் கொண்டாடி, ஆண்டவன் கருணையை நினைந்து வாழ்த்தி, மகிழ்ந்து இருக்கிறார்கள்.

இதை ஒட்டியே இன்னொரு வரலாறு. இப்படி கடலில் இருந்து எழுந்தருளிய ஆறுமுகனை அன்று முதல் வடமலையப்ப பிள்ளையன் மண்டபத்திலே எழுந்தருளச் செய்து அங்கு மண்டபப்படி நடத்துவது வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது. இந்த நிலையில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்ம நாயக்கர் ஒரு புதிய மண்டபம் கட்டி திருவீதி, உலாப் போந்த ஆறுமுகப் பெருமானை, வடமலையப்பிள்ளையன் மண்டபத்திற்குக் கொண்டு செல்லாமல், நேரே தன் புதிய மண்டபத்திற்கே எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். பாளையக்காரரின் ஆதிக்கத்தை அறிந்த வடமலையப்ப பிள்ளையனோ, இதைத் தடுக்க முனையவில்லை என்றாலும் ஆண்டவன் அறியானா அவர் உள்ளம் துயர் உறுவதை.