பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40
பாஸ்கரத் தொண்டைமான்
 

அன்னையையும் அத்தனையும் சேர்த்தே ஒரு சுற்றுச் சுற்றுகிறார். உலகம் உங்களிடம் தோன்றி உங்களிடம் நிலைத்து, உங்களிடம் தானே ஒடுங்குகிறது. ஆதலால் உங்களைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றியதாகத் தானே அர்த்தம், கொடுங்கள் கனியை என்கிறார். மறுக்க முடியாமல் கனியைக் கொடுத்து விடுகிறார்கள் அம்மையும் அப்பனும், விநாயகரிடம். உலகத்தை எல்லாம் சுற்றி, அலுத்து வந்த பிள்ளை, விஷயம் அறிந்து தாய் தந்தையரிடம் கோபித்துக் கொண்டு கோவணாண்டியாக வெளியேறி விடுகிறான் கயிலையை விட்டு. தாயாகிய பார்வதி அப்பா, நீயே ஞானப்பழமாக இருக்கும் போது உனக்கு வேறு பழம் நாங்கள் தர வேண்டுமா? என்று கூறி சமாதானப்படுத்துகிறாள். இப்படித்தான் ஞானப்பழமாகவே இருக்கும் பழநியாண்டவன் - பழநிமலை மீது ஏறி நின்று கொண்டிருக்கிறான் என்பர் புராணிகர்கள்.

இத்துடன் இன்னொரு கதை. மூவர்க்கும் முதல்வனான முருகனை, ஏனோ ஒரு நாள் பிரமன் மதியாது நடந்திருக்கிறான். அவ்வளவுதான், அவனைக் காதைப் பிடித்து இழுத்து, தலையிலே குட்டி பிரணவத்தின் பொருளை அறியாத நீ, சிருஷ்டி செய்ய அருகதை உடையவனில்லை என்று கூறிச் சிறையிலேயே அடைத்து விடுகிறான் முருகன். விஷயம் அறிகிறார் சிவபெருமான், மகனிடத்து வருகிறார். உனக்குத் தெரியுமா பிரணவத்தின் பொருள்? என்று கேட்கிறார். ஓ தெரியுமே என்று எகத்தாளமாகச் சொல்கிறான் முருகன். இப்போது சொல் பார்ப்போம் என்கிறார். சளைக்கவில்லை முருகன். 'கேட்கிறபடி இருந்து கேட்டால் சொல்லுவோம்' என்று அமுத்தலாகவே கூறுகிறான். பார்த்தார் சிவபெருமான். வேறு வழியில்லை. தன் பிள்ளையின் காலடியிலே சிஷ்யனாக அமர்ந்து கை கட்டி வாய் பொத்தி, பிள்ளை மூலமாகவே பிரணவ மந்திர உபதேசம் பெறுகிறார். இப்படித்தான் 'குருவாய் அரனுக்கும் உப தேசித்தான் குகன்' என்பர் அறிஞர்கள். இந்த ஞானபண்டிதன் தான் சுவாமிநாதன் என்ற பெயரோடு அந்தப் பழைய ஏரகம் - இன்றைய சுவாமி மலையில் இருந்து, தன் தந்தைக்கு மாத்திரம் அல்ல, உலகில் உள்ள மக்கள் எல்லோருக்குமே, ஞான உபதேசம் செய்து கொண்டிருக்கிறான்.

இதில் ஒரு வேடிக்கை - ஞானப்பழமாக நிற்கும் பழநியாண்டவனும், ஞானபண்டிதனாக விளங்கும் சுவாமிநாதனும்,