பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

51


கொள்ளச் செய்தவனை’ முனிவன் எப்படி எல்லாம் வழிபட்டிருக்க வேண்டும். இப்படித் தமிழ்க் கவிப் பெருமாளாக இருந்தவனையே சங்கப் புலவன் நக்கீரன் பின்னால் பாடி வழிபாடு செய்திருக்கிறான். சிவனோடேயே வாதிட்டு, குற்றம் குற்றமே என்று அறைகூவிய கவிஞன், தனக்கும் தன்னைச் சேர்ந்தவர் நூற்றுவருக்கும் துன்பம் வந்தபோது, கூவியழைக்க, குமரனைத் தான் நினைந்திருக்கிறான். இப்படிக் கூவியழைத்து பயன் பெற்றவன், மற்றவர்களும் பயன்பெறும் வண்ணம் அப்பெருமானிருக்கும் இடத்திற்குச் செல்லவும், அங்கெல்லாம் அவனை வழிபடவும் நல்ல வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறான்.

நக்கீரனுக்குப் பின் எத்தனையோ பேர் எப்படி எப்படி எல்லாமோ வழிகாட்டியிருந்தாலும் நாம் நினைவு கூற வேண்டிய பெருமான் குமரகுருபரனாகவே இருக்கிறார். தென்பாண்டிநாட்டிலே ஸ்ரீ வைகுண்டம் என்ற சிற்றூரிலே பிறந்து ஐந்து ஆண்டு அளவும் ஊமையாகவே இருந்தவர் திருச்செந்தூர் சென்று ஆண்டவனை வழிப்பட்ட உடனே வாய்திறந்து பாடும் பேறு பெறுகிறார். 'கருணைத் திரு உருவாய் காசினியில் தோன்றிய குருபரன்’ என்ற பெயர் நிலைக்கிறது அவருக்கு. பச்சை மயில் வாகனமும் பன்னிரண்டு திண் தோளும் அச்சம் அகற்றும் அயில் வேலும் தாங்கிய வேலவனை, அவர் அழகொழுக வர்ணிக்கும் பாடலான கந்தர் கலிவெண்பா, பாடும் பக்தர்களை எல்லாம் பரவசம் அடையச் செய்கிறது.

போகமுறும் வள்ளிக்கும்
 புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும்
 முகமதியும் - தாகமுடன்
வந்து அடியில் சேர்ந்தோர்
 மகிழ வரம் பலவும்
தந்தருளும் தெய்வ முகத்
 தாமரையையும்

நினைந்து நினைந்து போற்றுகிறார்.

இவருக்கு எவ்வளவோ காலத்திற்கு முன்பே காஞ்சிபுரத்து கச்சியப்பர், கந்தன் வரலாறு முழுவதையும் புராணமாகவே