பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

55


கொண்டிருக்கிறான். நடு நாட்டிலோ மயில் ஊர் கந்தனாக மயில மலையிலே நிற்கிறான் என்றாலும் இந்தக் கோலக்குமரன் கொலு இருப்பது சோழ நாட்டில்தான் காவிரிக் கரையில் உள்ள அந்த அற்புதம் அற்புதமான கோயில்களில்தான்


ஏழ்தலம் புகழ் காவிரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர, ராஜகம்பீர
நாடாளும் நாயகனாக

அவன் அமர்ந்திருக்கும் உருவங்கள் தான் எத்தனை எத்தனை!

மயில் வாகனன் ஆக, வள்ளிமணாளன் ஆக, தனுஷ் சுப்பிரமணியன் ஆக, கார்த்திகேயனாக எல்லாம் அங்கே அவன் காட்சி கொடுக்கிறான். கும்பகோணத்திற்குத் தெற்கே தாராசுரத்திலே மண்டப முகப்பிலே நின்று கொண்டிருக்கிறான் ஒரு கார்த்திகேயன். நீண்டு உயர்ந்த மணி மகுடம் தரித்திருக்கிறான். புன்முறுவல் பூத்தலர்ந்த, பூங்குமுதச் செவ்வாய், அவன்றன் அழகினை மாத்திரம் என்ன, பேரருளையுமே பறைசாற்றுகின்றது.

அங்கிருந்து மாயூரம் சென்று அதற்கும் கிழக்கே பதினைந்து மைல் தொலைவில் உள்ள திருநனிபள்ளி என்னும் தேவாரஸ்தலமான கடாரம் கொண்டான் சென்றால் செப்புச் சிலை உருவில் மயிலேறி விளையாடும் ஆறுமுகனைக் காணலாம்.

சோழ நாட்டிலே உள்ள கோலக் குமரர்களில் முக்கியமானவர் மூவர், சிக்கல் சிங்காரவேலன், எட்டுக்குடி வேலவன், எண்கண்முருகன் இவர்கள் தாம். இவர்கள் மூவரையும் உருவாக்கிய சிற்பி ஒருவனே என்பர். நல்ல இளைஞனாக, உடல் வலிமையுடையவனாக சிற்பி இருந்த போது செய்த சிலை சிங்கார வேலவர் என்றும், உடல் தளர்ந்து கைவலி இழந்த காலத்தில் செய்யப்பட்டது எட்டுக்குடி வேலவன் என்றும், கண்ணையே இழந்திருந்தபோது உருவானான் எண்கண் முருகன் என்றும் கூறுகிறது கர்ணபரம்பரை. கண்ணிழந்தபோது செய்து முடித்த எண்கண் முருகனேநிறைந்த அழகுடையவனாக இருந்தால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை பண்ணிக் கொள்ளத் தெரியாதவர்களா தமிழர்?